tamilnadu

img

கலால் வரியிலிருந்து மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு முறையாக வழங்கவில்லை... தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு...

சென்னை:
ஒன்றிய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு முறையாக வழங்கவில்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

திமுக அரசு எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை 2 வாரங்களில் வெளியிடப்படும். தற்போதைய சூழலில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைக்க வாய்ப்பு இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.10 ஆக இருந்த வரியை 32.90 ஆக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ரூ.32.90 வரியில் ரூ.31.50 ஒன்றிய அரசு எடுத்துக்கொள்கிறது. ரூ.32.90 வரியில் ரூ.1.4 மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்குகிறது. பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.336 கோடி வருவாய் குறைந்துள்ளது. 

மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது. மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை மத்திய அரசே எடுத்து கொள்கிறது. 98 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல் விலையில் ரூ.70 ஒன்றிய அரசுக்கும், உற்பத்திச்செலவுக்கும் செல்கிறது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.20 மட்டுமே கிடைக்கிறது. வரியை குறைத்தால் ஒன்றிய அரசின் கூடுதல் வரி விதிப்புக்கு ஆதரவாக மாறிவிடும்.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.