tamilnadu

img

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு... வாக்குச் சீட்டில் குழப்பங்கள்; வீடியோ பதிவு செய்யப்படுகிறது வாக்கு எண்ணிக்கை

சென்னை:
தமிழகத்தில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.டிசம்பர் 27 அன்று நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 156 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 76.19 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் டிசம்பர் 30 திங்களன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு வாக்காளர்கள் தலா 4 வாக்குகளைச் செலுத்தினர்.25ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவுபெற்ற தைத் தொடர்ந்து அனைத்து வாக்குப்பெட்டி களும் 315 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2 கட்டங்களாக நடைபெற்ற வாக்குகள் அனைத்தும் ஜனவரி 2 வியாழனன்று எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் மாலையிலேயே முடிவுகளை வெளியிடவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணைராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை
முதல்கட்ட தேர்தலில் நடந்தது போலவே குழப்பங்கள், வாக்காளர்களை விலைபேசிய ஆளும் அரசியல் வாதிகள் எனப்பல சம்பவங்கள் இண்டாம் கட்டத்திலும் நடந்தன.திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணிஅடுத்த சேவூரில் தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 25 கிலோ அரிசி மூட்டை வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. (விபரம் : 5ம் பக்கம்)

பாஜகவினர் கொடுத்த அரிசி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே  அம்மாபட்டி கிராமத்தில் பாஜக சார்பில் லட்சுமி முருகேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவருக்கும் அவரது கணவர் முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இவர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை விநியோகம் செய்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அரிசிக் கடைக்குச் சென்ற பறக்கும்படை அதிகாரிகள், கடையைப் பூட்டி, அதன் உரிமையாளரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போட்டியிலிருப்பது 4 பேரா? 5 பேரா?
நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், செம்பனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய 6 ஒன்றியங்களுக்கு முதல் கட்டத் தேர்தல் 27-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் 75.75 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.வேதாரணியம், தலைஞாயிறு, கீழையூர், மயிலாடுதுறை, குத்தாலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 896 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 30-ம் தேதி 2-ஆம்கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில் வேதாரணியம் ஒன்றியத்தில் மொத்தம் 200 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில், தாணிக்கோட்டகம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சிபிஎம் சார்பில் வி.இளைய பெருமாள் போட்டியிடிட்டார். இவருக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது எனக் கருதப்படுகிறது.இந்நிலையில், தாணிக்கோட்டகம் ஊராட்சி 2-ஆவது வார்டுக்கு 4 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். ஆனால், வாக்குச் சீட்டில் வேட்பாளராக இல்லாத 5-ஆவது நபரின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனைச் சற்று நேரத்தில் அறிந்து கொண்ட 4 வேட்பாளர்களும் மற்றும் வாக்காளர்களும் வாக்குச் சாவடியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வாக்குச் சாவடியின் தலைமைத் தேர்தல் அலுவலர் நிலைமையை உணர்ந்து, மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த பின்,  வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டதாக அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை ஜனவரி-2 அன்று நடைபெறவிருப்பதால், அதற்குள் இந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு தேர்தல் நடத்தப் பெற வேண்டும். நடத்தப்படுமா என்பது கேள்விக்குறி.

இறந்தவர் வாக்காளர் பட்டியலில்...இருப்பவர் இறந்தவர் பட்டியலில்...
தஞ்சையில் இறந்த தந்தையின் பெயரை நீக்குவதற்கு பதிலாக, மகனின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதால், அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றார்.தஞ்சாவூர் அடுத்த வேங்கராயன் குடிக்காடு, தியாகி தெருவை சேர்ந்தவர் வீரையன் மகன் மாரிமுத்து (50) தொழிலாளி. இவர் திங்கள்கிழமை காலை உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேங்கராயன் குடிக்காடு அரசு தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார். அவருக்கு பூத் சிலிப் வழங்கப்படாததால், வாக்காளர் அடையாள அட்டையுடன் சென்ற நிலையில், அவரின் பெயரை தேர்தல் பணியாளர்கள், பட்டியலில் இருக்கிறதா என பார்த்துள்ளனர்.அதில் மாரிமுத்துவின் பெயர் இல்லை. அதற்கு மாறாக, மாரிமுத்து இறந்துவிட்ட தாகவும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மாரிமுத்துவின் தந்தை வீரையன் உயிருடன் இருப்பதாகவும் பட்டியலில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாரிமுத்து, தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து அவர்கள், உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் வாக்களிக்க முடியாமல் அவர் திரும்பி சென்றார்.

இது குறித்து மாரிமுத்து கூறியதாவது; இந்த பிரச்சனை குறித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை தெரிவித்து விட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தேர்தலிலும் வாக்களிக்க முடியவில்லை. அப்போதும் தேர்தல் அதிகாரிகளிடம் கூறினேன், நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தற்போதும் வாக்களிக்க முடியவில்லை. அரசு, நான் இறந்து விட்டதாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவேன்” என வேதனையுடன் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது  வீடியோ பதிவு 
இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குச்சீட்டுகளும் வீடியோ பதிவு செய்யப்படும் எனமாநில தேர்தல் ஆணையம் உயர்நீதி மன்றத்தில் உறுதி அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக்கோரி திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி பார்த்திபன் அமர்வில் விசாரணைக்கு வந்தன. வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு சீட்டுகளையும், அவை எண்ணப்பட்ட பிறகு போடப்படும் வாக்குப்பெட்டிகளையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகள் வாதிட்டன.

முறைகேடு நடைபெறும் என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும், விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்திலேயே உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச்சீட்டு களையும் வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டது.முறைகேடுகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழகம் முழுவதும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 315 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்தது. 

உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
இதனிடையே வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டரை நாட்கள் உள்ள நிலையில், அதனை ஏன் வீடியோ பதிவு செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிடுமாறு 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டனர். அதனை விசாரித்த நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்வற்கான விதிகள் ஏற்கனவே உள்ளன என்றும் அவை மீறப்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் கூறினர்.அப்போது குறுகிய கால அவகாசமே உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது என்பது சாத்தியமில்லாதது என்றும் அனைத்து மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது  எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.