நாடக நடிகர்களுக்கு ஓய்வூதியத் தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை
கரூர், ஜூலை 8- கரூர் நாடக நடிகர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் பால்காரர் பழனிசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நல்லமணி, செயலாளர் பழனிசெல்வம், பொருளாளர் கமலாதேவி, துணைச் செயலாளர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, நாடக நடிகர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை மற்றும் வழங்கப்படாத கலைநன்மணி, முதுமணி போன்ற விருதுகளை வழங்கிட கலைப் பண்பாட்டுத் துறையினரை கேட்டுக்கொள்வது, 60 வயது பூர்த்தியடைந்த நாடக நடிகர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை ரூ. 3000 என்பதை உயர்த்தி ரூ.5 ஆயிரமாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நாடக நடிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.