மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வ காண வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வாண்டார்கோட்டை வருவாய் கிராமத்தைச் சார்ந்தவர் திரு ஜெயரவிவர்மா. இவர் 2015ம் ஆண்டு முதல் கோவிலூர் கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ) பணியாற்றி வந்துள்ளார். மணல் திருட்டை தடுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இதற்காக மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை சிறை வைக்கப்பட்டுள்ளார். முதல்முறை வல்லாத்திராக்கோட்டை பகுதியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு வட்டாட்சியர் உத்தரவின் பேரில் மணல் கடத்தல் கும்பல் வைத்திருந்த மணலையும், ஜேசிபி இயந்திரத்தையும் பறிமுதல் செய்திருக்கிறார். மணல் திருட்டை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஸ்பெசல் டீம் வி.ஏ.ஓ. மணல் திருடுவதாகக் கூறி அவரை கைது செய்திருக்கின்றனர். வட்டாட்சியரின் உத்தரவை காட்டிய பிறகும் காவலர் பாலமுருகன் அதை சட்டை செய்யாமல் கைது செய்திருக்கிறார். வட்டாட்சியர் காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து தன்னுடைய உத்தரவின் பேரிலேயே வி.ஏ.ஓ. பணி செய்வதாகச் சொன்ன பிறகும் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் வட்டாட்சியரின் உத்தரவை ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்து, வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
அதன்பிறகு அதைப் பொறுத்துக் கொள்ளாத காவல்துறையினர் வி.ஏ.ஓ. மீது குண்டர் சட்டம் போட முயற்சித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களிடம் முறையிட்ட பிறகு அது கைவிடப்பட்டது. இதற்கிடையில் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2022 முதல் இன்று வரை 8 மாதம் தவிர அவருக்கு பிழைப்பூதியம் கூட வழங்கப்படவில்லை.
18.2.2023 அன்று தனது தந்தையை மருத்துவத்திற்காக அழைத்துச் சென்றபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் சிறப்பு பிரிவைச் சேர்ந்த காவல்துறை சார் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவலர் பிரபு ஆகியோர் வாகனத்தை நிறுத்தி தரக்குறைவாக திட்டி கார் சாவியையும், செல்போனையும் பிடுங்கிச் சென்றுள்ளனர். மேலும், புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சிறை வைத்துள்ளனர். மேலும், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்நிலையத்திற்குள்ளேயே அவரது சட்டையில் சில பொட்டலங்களை வைத்து கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து சிலரிடம் கட்டாயப்படுத்தி கஞ்சா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக வாக்குமூலம் எழுதி வாங்கியிருக்கின்றனர். 1.7 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை வி.ஏ.ஓ.வின் நண்பர்கள் கணேசன் மற்றும் சூர்ய சந்திர பிரகாஷ் ஆகியோர் கடத்தி வந்ததாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். கைது செய்த காவல் ஆய்வாளர் முகமது ஜாபரே புகார்தாரராகவும் புலன் விசாரணை அதிகாரியாகவும் செயல்பட்டிருக்கிறார். இது குறித்து வி.ஏ.ஓ. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு 11.05.2023 அன்று மனு கொடுத்துள்ளார். இது குறித்த வழக்கு மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் இருக்கிறது. இதேபோன்று வேறு பல வழக்குகளையும் அவர் மீது காவல்துறையினர் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளனர். தற்போது, 12.11.2025 அன்று வல்லாத்திரக்கோட்டை போலீசார் பிரிவு 110ன் கீழ் வழக்குப் பதிவு செய்து ரௌடி லிஸ்டில் சேர்த்திருக்கிறார்கள்.தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்வதும், மிரட்டுவதுமாக ஒரு நேர்மையான அதிகாரியை மன உளைச்சலுக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கியுள்ளனர்.
பட்டியல் சமூகத்தைச் சார்ந்த இந்த வி.ஏ.ஓ., மணல் திருட்டை தடுப்பதற்காக வட்டாட்சியரின் உத்தரவோடு நேர்மையாக செயல்பட்டதற்காக வழக்குகளை சந்தித்து வருகிறார். பிழைப்பூதியம் மறுக்கப்பட்டு கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு;
1. மணல் திருட்டை தடுப்பதற்காக பழிவாங்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ. ஜெயரவிவர்மா மீது புனையப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிடுவதற்கும்,
2. மணல் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக அரசு பொறுப்புக்களை தவறாக பயன்படுத்தி நேர்மையான அலுவலரை சித்தரவதைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கும்,
3. நேர்மையாக நடந்து கொண்டதற்காக பழிவாங்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்து, அவருக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டுமெனவும்,
4. இதுவரையிலும் மறுக்கப்பட்டுள்ள பிழைப்பூதியத்தை உடனடியாக வழங்குவதற்கும்,
5. நடைபெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் திரைக்கதைகளை விஞ்சும் வகையில் இருப்பதால் முழு உண்மையை வெளிக்கொணரும் வகையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுமாறும்,
6. மணல் திருட்டை தடுப்பதற்கு உரிய முறையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமெனவும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
