tamilnadu

img

விஜய்யின் மௌனம் கண்டிக்கத்தக்கது: சங்கீதா மீதான இணையவழித் தாக்குதலுக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு!

தவெக தலைவர் விஜய் இணையர் சங்கீதா மீதான இணையவழித் தாக்குதலுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா பொதுச் செயலாளர் அ.ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் சூழலில், அவரது இணையர் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது முற்றிலும் ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பெண் தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது அவரது அடிப்படை உரிமை. அதைச் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்க யாருக்கும் உரிமை இல்லை.

பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் பொதுச் சொத்து அல்ல.

விஜய்யின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அவரது தொண்டர்கள் சங்கீதாவிற்கு எதிராக ஆணாதிக்க வன்முறைப் பதிவுகள் மற்றும் கேலிச்சித்திரங்களைப் பரப்பி வருகின்றனர். இது கருத்துச் சுதந்திரம் அல்ல, பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை என்று அந்த அறிக்கை விளக்குகிறது.

மேலும், "திரைப்பட நடிகராக இருப்பது தனிப்பட்ட தொழில். ஆனால், அரசியல் கட்சி தொடங்கி மக்களிடம் ஆதரவு கோரும்போது அவர் பொதுவாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராகிறார். தன் பெயரைப் பயன்படுத்தி ஒரு பெண் இழிவுபடுத்தப்படும்போது, அதைக் கண்டிக்காமல் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மௌனம், அந்த வன்முறைச் செயல்களுக்கு வழங்கப்படும் மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்," என்று சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை விஜய் வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு தலைவரின் அரசியல் மற்றும் சமூகப் பொறுப்பாகும்.

சங்கீதா மீது அவதூறு பரப்புபவர்கள் மீது 'தவெக' கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாசப் பதிவுகளைத் தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களின் மரியாதை, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவை அரசியல் ஆதரவுக்கோ அல்லது ரசிக மனநிலைக்கோ பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.