வேலூர் பெண்கள் சிறையில் நன்னடத்தை கைதிகள் குடும்பத்தினருடன் சந்திப்பு
வேலூர், ஏப். 8-வேலூர் மத்திய, பெண்கள் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள நன்னடத்தைக் கைதிகள் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்தனர். தமிழக சிறைகளில் உள்ள கைதிகளின் மன அழுத்தம் குறைய சிறைக்குள் அவர்களுக்கு யோகா பயிற்சி, உடற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டாலும் கைதிகள் தங்களது மனைவி, குழந்தைகளைப் பிரிந்து சிறைக்குள் தனிமையில் வாடுவதால் மனஅழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து, தமிழக சிறைகளில் உள்ள நன்னடத்தைக் கைதிகளை அவர்களது குடும்பத்தினருடன் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச் சிறை ஆகியவற்றில் நன்னடத்தைக் கைதிகள் தங்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.இதில், வேலூர் மத்திய சிறை, பெண்கள் தனிச் சிறை ஆகியவற்றில் 17 நன்னடத்தைக் கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இந்தச் சந்திப்பு நடந்தது.
சிறீரங்க பூபதி கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா
விழுப்புரம், ஏப். 8-விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே உள்ள ஆலம் பூண்டி சிறீரங்கபூபதி கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலம்பூண்டி சிறீரங்க பூபதி கல்வியியல் கல்லூரி, சிறீரங்க சின்னம்மாள் கல்வியியல் கல்லூரி, சிறீரங்க பூபதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார்.செயலாளர் சிறீபதி முன்னிலை வகித்தார். முன்னதாக எம்.எட்., கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் வரவேற்றார். காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசளித்தார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது, கல்வி இயக்குநர் குமார், கல்லூரி முதல்வர்கள் சசிகுமார், செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை விபத்தில் தொழிலாளி பலி
வேலூர், ஏப்.8-திருப்பத்தூரை அடுத்த மண்டலநாயனகுண்டா பத்ரிகானூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்(45). கூலித் தொழிலாளி. அவர் பிற்பகல் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் திம்மராயன்(46), மதனாங்குட்டையைச் சேர்ந்த நண்பர் ரவி (43) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் நாட்டறம் பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது முத்தனப்பள்ளி அருகே எதிரே வேகமாக வந்த மினிலாரி, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரவி, திம்மராயன் ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, புதுப்பேட்டை காட்டூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (33) கைது செய்தனர்.