world

img

போரில்லா உலகை விரும்பும் தோழமையின் விண்ணப்பம்!

போரில்லா உலகை விரும்பும் தோழமையின் விண்ணப்பம்!

"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்"

–தொடக்க வகுப்பில் பயின்ற திருக்குறள்.

"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்"

–குழந்தைப் பருவத்தில் ஆழமாக பதிந்துவிட்ட வள்ளலார் அருள் மொழி.

 "பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே"

–பதின்பருவத்தின் தொடக்கத்தில் மனதைப் பக்குவப்படுத்திய மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வேண்டுதல்.

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

–பதின்பருவத்தின் இறுதியில் தெளிவைத் தந்த பாவேந்தர் பாரதிதாசனார் வரிகள்.

"யுத்த ஒலி கேட்கிறது, ஊர்மிரட்ட எண்ணுபவர்

பித்தம் அணுகுண்டாய்ப் பேயாய் அலைகிறது;

ரத்த வெறிபிடித்த லாப அரக்கர்களின்

கத்தி, மனிதர் கழுத்தறுக்க நீள்கிறது!"

–வாலிப வயதில் முதலாளித்துவத்தின் உச்சமான ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கெதிராய் உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்திய கவிஞர் தமிழ்ஒளியின் கவிதை வரிகள்.

Forward, the Light Brigade!”

Was there a man dismayed?

Not though the soldier knew

   Someone had blundered.

   Theirs not to make reply,

   Theirs not to reason why,

   Theirs but to do and die.

   Into the valley of Death

   Rode the six hundred.

   - Alfred, lord Tennyson

–போர் தொடங்க மன்னன் ஆணையிட்டதால்,  கேள்வி எழுப்பாமல், யுத்த களம் புகுந்து, மாண்டு போன வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் ஆல்பிரட் லார்ட் டென்னிசன் கவிதை வரிகள்.

மன்னர்களின் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்கலாம், மக்களாட்சியில் இறுதி இறையாண்மை மக்களிடமே என்கிறபோது, மக்கள் யுத்தத்தை நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் டென்னிசனுக்கு ஆறுதல் கூறும் கட்டுரையை வாலிப வயது எழுத வைத்தது.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக"

–என்ற திருக்குறள் நெறிப்படி, போரில்லா உலகம் பற்றிக் கற்றதன் அடிப்படையில் அதுவே இலட்சியம் என்று வாழ்ந்துகொண்டிருக்கையில்,  மக்களாட்சியில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி நடந்தாலும், போர் என்பதை அரசு அறிவித்தால், ஏன், எதற்கு என்ற கேள்வி எழுப்பாமல் டென்னிசன் சொன்னதுபோல் சாவின் பள்ளத்தாக்கில் புகுந்து மடிந்து போவதுதான் தேசப் பற்று என்றால், வாழ்நாளின் இறுதி நாட்களில் இருக்கும் எனக்கு மனம் ஏற்க மறுக்கிறது.

செய்தித் தாளை வாசித்ததும், ஒரு சந்தேகம் எழத் தொடங்கியது‌. காவல் துறை அனுமதி பெற்றுப் போக வேண்டிய இடம் என்றால், அந்த இடத்தின் பாதுகாப்பிற்காக, அந்த இடத்தினுள்ளே நுழைபவர்கள் அனுமதி பெற்றுள்ளனரா என்று சோதிக்க, அங்கே ஒரு காவலராவது இருந்திருக்க வேண்டுமே? அவ்வாறு ஒரு காவலர் இருந்திருந்தால், இரண்டாயிரம் பேருக்கு மேல் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முற்படுவதை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்க முடியுமே? அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது மிகுந்த வியப்பிற்கு உரியதாக உள்ளது. உரியவர்களின் பதிலை எதிர்பார்த்து இவ்வாறான கேள்விகள் காத்திருக்கின்றன.

இறுதி இறையாண்மை மக்களிடமே உள்ளது. மக்களின் கேள்விகளுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் பதில் சொல்வதே மக்களாட்சி மாண்பு.‌

பிரிட்டன் தலைநகரை ஹிட்லரின் ஜெர்மன் படைகள் குண்டு வீசி அழித்துக் கொண்டிருக்கையில், ஜெர்மன் நாட்டின் தொழிலாளர்கள், பிரிட்டன் தொழிலாளர்களுக்கு கடிதம் எழுதினார்கள். "எங்கள் நாட்டு படைகள் உங்கள் மீது நடத்தும் தாக்குதல் எங்களுக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. நாங்கள் யுத்தத்தை விரும்பவில்லை. எங்கள் நாட்டு அரசிடம் போர் வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம். நீங்களும் உங்கள் நாட்டு அரசிடம் போர் வேண்டாம் என்று கூறுங்கள். தொழிலாளர் வர்க்கமாக நாம் ஒன்றிணைந்து போர் இல்லாத சமதர்ம உலகைப் படைப்போம்," என்று போரின் உச்சத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கே உரித்தான குணாம்சத்துடன் இருநாட்டு மக்களும் போரை நிறுத்த முயன்றது இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறது.

இதோ, பயங்கரவாதத் தாக்குதலில் எனது சகோதர, சகோதரிகளில் 26 பேர் மாண்டு போயினர். மனம் வேதனையில் துடிக்கிறது. மாண்டு போன ஒரு சகோதரரின் மகள், "எனது தந்தையைப் பறிகொடுத்தேன், அதேவேளையில் அன்புமிக்க இரண்டு காஷ்மீர் சகோதரர்களை பெற்றேன். இஸ்லாத்தைப் பின்பற்றும் அவர்கள் இருவரின் அன்புதான் என்னையும் எனது குழந்தையையும் பத்திரமாக சொந்த ஊர் கொண்டு வந்து சேர்த்துள்ளது,” என்று கூறிய  அந்த அன்புச் சகோதரி, மனித நேயத்தை உயர்த்திப் பிடிக்கக் கற்றுத் தந்திருக்கிறார்.

எந்த நாட்டில் வாழும் தொழிலாளர் வர்க்கமும் பயங்கரவாதத்தை விரும்புவதில்லை. உழைக்கும் மக்களுக்குப் பயங்கரவாதம்  உடன்பாடு இல்லாத ஒன்று.

இரக்கம் மிகுந்த இந்தியர்களை நம்பி, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக இந்தியா வந்தவர்களை. "உன் விசா ரத்து. திரும்பப் போ! 48 மணி நேரத்தில் வெளியேறு," என்றால் அப்பாவி நோயாளிகளும், அவர்களுக்கு உதவ வந்தவர்களும் எவ்வளவு பெரிய துயரத்தில் துடித்துப் போவார்கள். சிகிச்சை முடியாமல் பாதியில் செல்வதானால் உயிர் போகுமே, அது கொலை செய்வதற்கு சமம் இல்லையா?

மகான் புத்தரும் அருட் பிரகாச வள்ளலாரும் வலம் வந்த இந்த மண்ணில் மனிதநேயம் அழிந்துபோக அனுமதிக்கலாமா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14 மற்றும் 21 இந்த மண்ணில் எல்லோருக்குமானது. குறிப்பிட்ட இந்த கூறுகளில் குடிமக்கள் என்ற சொல் இல்லை. மற்ற பெரும் பகுதி கூறுகளில் குடிமக்கள் என்ற சொல் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நாம் உணர வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் உயிருக்குப் போராடும் மனிதர்களுக்கு இரக்கம் காட்டுவதே அடிப்படை மனித உரிமையை மதிக்கும் செயல்.

நோயாளிகளையும், அவர்களுடன் வந்தவர்களையும்  கண்காணிக்கிற ஏற்பாட்டுடன் சிகிச்சையை முடித்து அனுப்புவதுதான் இந்தியப் பண்பாக இருக்க முடியும். இதை அரசுக்கு உணர்த்துகிற பொறுப்பு மருத்துவர்களுக்கும் இருக்கிறது.

குடிநீரும், உணவு உற்பத்திக்கான பாசன நீரும் வழங்க மறுத்தால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?

எனது இந்தியா கொடுஞ்செயல் செய்யும் நாடல்ல. பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சம் கொண்ட நாடு.

பயங்கரவாதத்தை வேரறுப்போம். அதே  வேளையில் உழைக்கும் மக்களை துயரத்தில் ஆழ்த்தும் செயலையும் தவிர்ப்போம்.

தொழிலாளர் வர்க்கமாக கரம் கோர்த்து மனிதாபிமானத்துடன் அரசு நடக்க வேண்டும் என்று உரத்துக் குரலில் அரசுக்குத் தெரிவிப்போம்.

பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களைத் தனிமைப் படுத்துவோம். உலக நாடுகள் பயங்கரவாத்தை ஒடுக்க ஓரணியில் திரள வேண்டும் என்று கோருவோம்.

யுத்தத்தை தவிரப்பதே பொருளாதாரத்தைக் காக்கும். விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பாற்றும்.

"நீயும் நானும் பூமித் தாயின் பிள்ளைகள். நமக்குள் பகை வேண்டாம். போர் வேண்டாம்" என்று அண்டை நாட்டு தொழிலாளர் வர்க்கத்துடன் உரையாடல் நிகழ்த்த முன்வருவோம்.

மனிதம் தழைக்கட்டும். மானுடம் வெல்லட்டும்!

போரில்லா உலகை விரும்பும் தோழமை அன்புடன்,

-பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

கல்வியாளர்