உயிரை உண்டாக்கியது யார்? கடவுளா, இயற்கையா?
கடவுள் அல்லது தெய்வீக சக்தி ஒன்று இருக்கிறது என்பதற்கு ஆதரவாக முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று உயிர் தானாகவே உண்டாகியிருக்க முடியாது; கடவுளின் கரங்களாலேயே அவை உருப்பெற்றிருக்கும் என்பதாகும். உயிரினங்கள் எவ்வாறு இயற்கையிலேயே உண்டாக முடியும் என்பதற்கான வாதங்களை அறிவியலாளர்கள் ஒபாரின், ஹால்டேன், பெர்னால் ஆகியோர் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படித்தான் உயிரினங்கள் தோன்றின என்பதற்கான சோதனை சாலை நிரூபணங்கள் கிடைக்கவில்லை என்றாலும் 1953 இல் நடத்தப்பட்ட யுரே மில்லர் பரிசோதனை கிட்டத்தட்ட அதை நிரூபித்தது.
இப்போது ஸ்டான்போர்டு குழுவினர் நடத்திய சோதனை, புவியில் காணப்படும் உயிரினங்களை ஒத்த சிக்கலான மூலக்கூறுகள் இயற்கையாகவே உண்டாக முடி யும் என்று காட்டியுள்ளது. இதற்குப் பின், எளிமையான உயிரினத்திலிருந்து மனிதன் வரை எவ்வாறு உண்டா னது என்பதை பரிணாமக் கொள்கை எளிதாக விளக்கி விடும். இந்த ஆய்வுகளின் வரலாற்றை சற்று காண் போம்.
அங்க மூலக் கூறுகள்
1920களில் சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த அலெக் சாண்டர் ஒபாரின் எனும் உயிரி வேதியியலாளர், இயற்கை யான வேதி வினைகள் உயிரின் ஆதாரமாக இருக்கலாம் என்று முன்மொழிந்தார். பூமியில் உயிரினங்கள் தோன்று வதற்கு முன் மீத்தேன், அம்மோனியா, நீராவி ஆகியவை அடங்கிய வளிமண்டல சூழலில் பூமியில் இருந்த ஆதிக் குழம்பிலிருந்து(“primordial soup” ) உயிரைக் கட்ட மைக்கும் சிக்கலான அங்கக மூலக்கூறுகள் இயற்கை யாகவே தோன்றியிருக்கலாம். இந்த மூலக்கூறுகள் ஒன்றி ணைந்து நுண்ணிய பிசுபிசுப்பான குமிழிகள் ஆக மாறி யிருக்கும். பின் இவைகள் சத்துகளை இழுத்து தங்களைத் தாங்களே உண்டாக்கிக் கொண்டிருக்கும்.
வேறுபாடில்லை
1929இல் பிரிட்டிஷ் விஞ்ஞானியும் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினருமான ஹால்டேன் என்பவர் எளிமை யான அங்கக மூலக்கூறுகள் புற ஊதாக்கதிர்கள் துணை யுடன் சிக்கலானதாக மாறி இறுதியில் உயிர் செல்கள் என்று சொல்லக்கூடியவைகளாக வடிவெடுத்தன என்று சுயேச்சையாக முன்மொழிந்தார். இந்த இருவருமே கரிமப் பொருட்களுக்கும் அனங்ககப் பொருட்களுக்கும் (organic and inorganic)அவற்றின் சிக்கலான கட்ட மைப்பு தவிர வேறு வேறுபாடுகள் இல்லை என்று நிறு வினர்.
முக்கிய முன்மொழிவு
பின்னர் 1949இல் பிரித்தானிய இயற்பியலாளரும் மார்க்சியவாதியுமான ஜே.டி.பெர்னால் ஒரு கருது கோளை வைத்தார். களிமண்ணும் தாது உப்புகளும் நிறைந்த அலை ஏற்ற பகுதிகளில் இப்படிப்பட்ட கரிம வேதிப்பொருட்கள் உண்டாகியிருக்கலாம் என்றார். களி மண்ணானது கரிம வேதிப்பொருட்களை பெரிய அளவில் இழுத்து அவை புரதம், நியூக்கிளிக் அமிலங்கள் போன்ற சிக்கலான பாலிமர்களாக மாறுவதற்கு சாதகமாக இருந்தி ருக்கும். உயிரின் முன்வடிவங்கள் பெருங்கடலிலும் ஆறு களிலும் பெரிதும் நீர்த்துப் போயிருக்கும் போது, எவ்வாறு அவை திரட்சி அடைந்து சரியான கட்டமைப்பாக மாறி யிருக்கும் என்கிற முக்கிய கேள்விக்கு விடை காணுவதில் அவரது முன்மொழிவு உதவியது. அமினோ அமிலங்கள் 1953இல் ஹரால்டு யுரே என்பவரின் ஆய்வு மாணவ ரான ஸ்டான்லி மில்லர் என்பவர் ஒபாரின், ஹால்டேன் ஆகி யோர் வாதங்களாக முன்வைத்ததை சோதனை மூலம் நிரூபித்தார். மில்லர் - யுரே குழுவினர் ஒரு சீலிடப்பட்ட குடு வையில் நீர், அம்மோனியா, ஹைடிரஜன் ஆகியவற்றை வைத்து அதனுள் மின் பொறிகளை செலுத்தினர். இது மின்னல் தாக்குவதை ஒத்ததாகும். இதனால் உண்டான குழம்பில் புரதத்தின் அவசியமான கூறுகளான கிளைசின், அலனைன் மற்றும் அஸ்பார்டிக் அமிலம் போன்ற அமினோ அமிலங்களை கண்டனர். இந்த பரிசோதனை மூலம் கடலில் மின்னல் தாக்கும் போது தொடக்க நிலை வளிமண்டல வாயுக்களான மீதேன், அம்மோனியா, ஹைடிரஜன் ஆகியவற்றோடு வினை புரிந்து உயிரின் அடிப்படை மூலக்கூறுகள் உண்டாக லாம் என்று காட்டப்பட்டது. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. மின்னல் எப்போதாவதுதான் நிகழும்; மேலும் கடல் என்பது பெரும் பரப்பு என்பதால் உயிரின் தொடக்கத் திற்கு இது சரியான காரணமாக இருக்க முடியாது. நுண் மின்னல்... தற்போது, ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வா ளர்கள் உயிரின் அடிப்படை மூலக்கூறுகளை வேறு ஒரு சாத்தியமான வழியில் உண்டாக்கியுள்ளனர். பேராசிரியர் ரிச்சார்ட் சரேவும் மூன்று முதுநிலை முனைவர் பட்ட ஆய்வாளர்களும் தொடக்கநிலை வளிமண்டல சூழலில் (primordial atmosphere) எதிர் மின்ஏற்றம் கொண்ட குமிழிகளிடையே நுண் மின்னலை செலுத்தும்போது அதே அடிப்படை மூலக்கூறுகள் உண்டாகலாம் என்று காட்டி யுள்ளனர். இந்த நிகழ்வானது அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நுண் மின்னல் கண்களால் பார்க்க இயலாது என்றாலும் அதிக ஆற்றல் கொண்டவை ஆகும். இந்த மின்ஏற்றத்தின் போது புரதம் மற்றும் டி என் ஏ ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்பு வேதிக் கூறுகள் உண்டானது. உயிர் தோன்று வதற்கு முன்பான வேதிவினை கடல் பரப்பில் பெரும் மின்னல் தாக்குதலால் உண்டானது என்கிற கருது கோளுக்கு மாறாக கரிம மூலக்கூறுகள் திரண்டிருக்கும் கடற்கரை மற்றும் ஆறுகளில் நுண் மின்னல் தாக்கு தலால் உண்டாகியிருக்கும் என்பது ஒரு மாற்று கருது கோளாக தோன்றுகிறது. மில்லரின் சோதனையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வளி மண்டல வாயுக்களான மீத்தேன் மற்றும் அம்மோனியா தொடக்கநிலை பூமியில் இல்லை என்றும் பெரும்பாலும் கார்பன் டை ஆக்சைட் மற்றும் நைடிரஜனால் ஆனது என்றும் ஒரு விமர்சனம் வைக்கப்பட்டது. இதனடிப்படை யில் செய்யப்பட்ட சோதனைகளில் குறைந்த எண்ணிக்கை யிலேயே அமினோ அமிலங்கள் உண்டானது. மில்லரின் மாணவரான ஜெப்ரி படா இதே சோதனையை மேம்பட்ட முறைகளை கைக்கொண்டு அதிக எண்ணிக்கையிலான அமினோ அமிலங்களை உண்டு பண்ணினார். ஒரு கணத்தில் படைக்கப்பட்டதல்ல இந்த ஆய்வுகள் உயிரின் தோற்றம் என்பது வேதியியல் மற்றும் இயற்பியலின் சக்திகளால் உந்தப்பட்ட மெது வாக நிகழ்ந்த ஒன்று என்று காட்டின. அது ஒரு கணத்தில் படைக்கப்பட்ட ஒன்று அல்ல. அல்லது மாய சக்திகளின் தலையீட்டால் நடந்தது அல்ல. ஆழ்கடல் துளைகள், எரி மலை வெடிப்புகள், அலை ஏற்ற களிமண் பரப்பு மற்றும் நுண் மின்னல் இவை எல்லாமே உயிரின் தோற்றத்திற்கும் தொடக்க நிலை பரிணாமத்திற்கும் பங்களித்திருக்கலாம். அண்டத்தில் உள்ள மற்ற கோள்களிலும் இது போன்ற சூழல் இருந்தால் உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. எனவேதான் வேற்று கோள்களிலும் உயிரி னங்கள் உள்ளனவா எனும் ஆய்வு, நீர் மற்றும் ஆற்றல் ஆதாரங்கள் உள்ள செவ்வாய், ஜூபிடரின் ஐரோப்பா எனும் நிலவு, சனிக் கோளின் என்சிலாடஸ் நிலவு ஆகிய வற்றை நோக்கி நடத்தப்பட வேண்டும். நாம் அதிகம் தெரிந்து கொள்ள கொள்ள உயிரின் தோற்றத்திற்கு கடவுள் எனும் கருத்தோ மாய மந்திர படைப்பாளர்களோ அறிவார்ந்த கட்டமைப்போ தேவையில்லை என்ற புரிந்து கொள்கிறோம். தேவைப்பட்டதெல்லாம் வேதியியல், தொடர்ச்சியான நிகழ்வு, மூலக்கூறுகளின் இயல்பான சேரும் தன்மை மற்றும் எளிமையான அமைப்பிலிருந்து சிக்கலான கட்டமைப்பு ஆகியவையே.