articles

img

செல்லி - ஆர்.பத்மகுமாரி

செல்லி -ஆர்.பத்மகுமாரி

பள்ளிக்கூடத்தில் அமுதாவிற்கு செல்லியை மட்டும் தான் பிடிக்கும். டவுனில் பெரிய பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு இந்த சின்ன ஊரில் சின்ன பள்ளிக்கூடத்திற்கு வர அமுதாவிற்கு விருப்பமில்லை. ஆனாலும் அப்பாவிற்கு இந்த ஊர் தபால் ஆபீஸிற்கு வேலை மாறுதல் ஆகிவிட்டதால் இந்த ஊருக்கு வர வேண்டியது கட்டாயம் ஆகிவிட்டது. வெறுப்புடன் பள்ளிக்கூடத்திற்கு சென்ற முதல் நாள் செல்லிதான் தெத்துப்பல் தெரிய  சிரித்துக் கொண்டே அமுதாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.எண்ணெய் பிசுக்கேறிய ஒற்றைக்கல் மூக்குத்தி போட்டிருந்தாள். அது  அவ்வப்போது “ மினுக் மினுக்” என மின்னி யது. சுருட்டை முடியில் நிறைய எண்ணெய்  தேய்த்து படிய சீவி சடை பின்னியிருந்தாள். அவளுடைய பாவாடையும் சட்டையும் பழைய தாக கசங்கி இருந்தது. இடைவேளையில் அமுதாவின் கையைப்பிடித்தபடியே பள்ளிக் கூடத்தை சுற்றிக் காண்பித்தாள். செல்லியை அமுதாவிற்கு மிகவும் பிடித்து விட்டது. மதிய உணவு இடைவேளையில் செல்லி பள்ளியிலேயே வழங்கும் மதிய உணவு சாப்பிடப் போய்விட்டாள். மற்ற மாணவிகள் அவரவர் தோழிகளுடன் குழுவாக உட்கார்ந்த சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அமுதாவும் அவர்களுடன் போய் உட்கார்ந்து சாப்பிடத் துவங்கினாள். அப்போது ஒரு மாணவி” அமுதா, நீ செல்லி யிடம் பேசாதே “ என்றாள். மேலும் “ நாங்கள்  அவளிடம் பேச மாட்டோம். அவளுடைய அப்பா  சாக்கடை சுத்தம் செய்யும் வேலை பார்க்கிறார்.  அவள் அம்மா தெருவை கூட்டிச் சுத்தம்  செய்யும் வேலை செய்றாங்க “ என்று கூறி னாள். அமுதாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அமுதா எப்போதும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்குப் போனவுடன் பள்ளிக்கூடத்தில் நடந்த  விஷயங்களை பற்றி அம்மாவுடன் பேசுவாள். அன்றும் போனவுடன் செல்லி பற்றியும், மற்ற மாணவிகள் அவளுடன் பேசக்கூடாது என்று கூறியதைப் பற்றியும் சொன்னாள். “செல்லியின் அம்மா அப்பா எந்த வேலை செய்தால் என்ன? எனக்கு செல்லியை மிகவும்  பிடிக்கிறது. நான் அவளுடன் பேசுவேன்” என்றாள். அதற்கு அம்மா “உனக்குப் பிடித்தால்  பேசலாம். அதில் தப்பு ஏதுமில்லை” என்று சொல்லிவிட்டாள். அமுதா, பிஸ்கட், சாக்லேட் கேக் எல்லாம் செல்லிக்குத் தருவாள். செல்லி மிகவும் ஆசை யோடு அவற்றைச் சாப்பிடுவாள். பிஸ்கட், சாக்லேட் எல்லாம் வாங்கி தர அவள் வீட்டில்  பண வசதி இல்லை என்று சொல்லுவாள். செல்லி கொண்டுவரும் வறுத்த புளியங்கொட்டை,  சீனி கிழங்கு, வத்தல், புளியம்பழம் எல்லாம் அமுதாவுக்கு பிடிக்கும். அவற்றை அமுதா வாங்கிச் சாப்பிடுவாள். செல்லி எப்போதும் கணக்கு பாடத்திலும், தமிழிலும் நிறைய மதிப்பெண்கள் வாங்குவாள்.  அமுதா கணக்கு பாடத்தில் வரும் சந்தே கங்களை செல்லியிடம் கேட்டு தெரிந்து கொள்வாள். இரண்டு பேரும் மிகவும் நெருங்கிய  தோழிகள் ஆகிவிட்டனர். செல்லி ஆங்கில பாடம்  படிக்க சிரமப்படுவாள். வகுப்பாசிரியை ராதா தான் அவளுக்கு ஆங்கில பாடம் சொல்லிக் கொடுப்பார். செல்லி அழகாக நடனம் ஆடுவாள்.ஒரு நாள்  காலை வகுப்பு துவங்கும் முன் செல்லி அமுதா விற்கு நடனமாடிக் காட்டிக் கொண்டிருந்தாள். அவளுடன் சேர்ந்து அமுதாவும் ஆடினாள். அப்போது வகுப்பிற்கு வந்த ராதா டீச்சர் இவர்  கள் நடனம் ஆடுவதை கவனித்து விட்டார். சிரித்துக் கொண்டு அருகில் வந்த டீச்சர்” நீங்கள்  இரண்டு பேரும் நன்றாக ஆடுகிறீர்கள். இந்த வரு டம் ஆண்டு விழாவில் நம் வகுப்பு சார்பாக ஒரு  குழு நடனம் ஆட வேண்டும். உங்கள் இருவரை யும் அதில் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார். டீச்சர் சொன்னது போலவே ஆண்டு விழா வில் நடனமாட வகுப்பிலிருந்து மூன்று மாணவி கள் அமுதா மற்றும் செல்லி என ஐந்து பேருக்கும் பாரதியார் பாடல் ஒன்றுக்கு நடனம்  ஆட சொல்லிக் கொடுத்தார்.ஆண்டு விழா விற்கு இரு நாட்களுக்கு முன் பள்ளி தலைமை  ஆசிரியர் மாணவர்களின் நிகழ்ச்சியை பார்வை யிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.இவர்  களது குழு நடனத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்தார். நடனம் ஆடி முடித்த பிறகு செல்லியை பார்த்து “ நீ சாக்கடை வேலை செய்யும் கருப்பு சாமி மகள் தானே என்று கேட்டார் “ செல்லி ஆமாம் என்று சொன்னவுடன் டீச்சரைப் பார்த்து  “செல்லியை இந்த குழு நடனத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அவளை விட்டுவிட்டு மற்ற நால்வர் மட்டும் ஆடினால் போதும்” என்று சொல்லிவிட்டார்.இதைக் கேட்டவுடன் செல்லி அழத் துவங்கி விட்டாள். அமுதாவிற்கு கோப மாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. இந்த குழுவில் எல்லோரையும் விட செல்லி  தான் நளினமாக ஆடுவாள். செல்லியின் திறமை யைப் பார்க்காமல் அவளது அப்பாவின் வேலை யை காரணம் காட்டி ஆட விடாமல் தடுத்த தலை மை ஆசிரியர் மீது அமுதாவிற்கு ஆத்திரமாக வந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செல்லி உற்சாக மில்லாமல் மிகவும் சோகமாகவே இருந்தாள். அமுதாவும் ராதா டீச்சரூம்தான் அவளிடம் பேசி,  சமாதானப்படுத்தி அவள் படிக்க உற்சாகப் படுத்தினார்கள். செல்லி மெல்ல மெல்ல தேறிக்  கொண்டு வந்த போது மற்றொரு அநியாயமும் செல்லிக்கு நடந்து விட்டது. அன்று தீபாவளி விடுமுறை முடிந்து அடுத்த  நாள். எல்லோரும் தீபாவளி உடை அணிந்து கொண்டு துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தார்  கள். அப்போது அமுதாவின் வகுப்பிற்குள் போன எல்லா மாணவ மாணவிகளும் வெளியே  ஓடி வெளியே வந்து விட்டனர்.ஒன்றும் புரியா மல் ராதா டீச்சர் வகுப்பறைக்குள் சென்ற பார்த்த  பொழுது தான் அங்கு ஒரு பெருச்சாளி செத்து  கிடந்தது தெரிந்தது.என்ன செய்வது என்று தெரி யாமல் எல்லோரும் நின்று கொண்டிருந்தார்கள்.  அப்போது தகவல் அறிந்த தலைமை ஆசிரி யர் அங்கு வந்தார். நின்று கொண்டிருந்த அனை வரையும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். பிறகு செல்லி யைப் பார்த்து “செல்லி அந்த பெருச்சாளியை எடுத்துக்கொண்டு போய் எங்காவது போட்டு விட்டு வா” என்று அதட்டலுடன் கூறினார். செல்லிக்கு கை கால்கள் எல்லாம் நடுங்க  ஆரம்பித்து விட்டன. தேம்பித் தேம்பி அழுது  கொண்டு தயங்கியபடி நின்று கொண்டி ருந்தாள். அதை கவனித்த தலைமை ஆசிரியர்” செல்லி நீ தான் இந்த பெருச்சாளியைத் தூக்கிப்  போட வேண்டும். நான் இப்போது போய்விட்டுப் பத்து நிமிடம் கழித்து வந்து பார்ப்பேன். அதற்குள்  நீ பெருச்சாளியைத் தூக்கிக் கொண்டு போகா விட்டால் நாளையிலிருந்து நீ பள்ளிக்கு வரக் கூடாது “ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் போனார். சுற்றி நின்றவர்கள் செல்லியை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். சில மாண வர்கள் அவளை கேலி செய்து சிரித்தார்கள். செல்லி கைகள் நடுங்க தன் நோட்டு புத்தகத்தி லிருந்து ஒரு பேப்பரைக் கிழித்து எடுத்து பெருச்  சாளியின் வாலைப் பிடித்து தூக்கிக்கொண்டு அழுதபடியே நடந்து போனாள். அன்று போன வள் தான் செல்லி அதற்குப் பிறகு பத்து நாட்க ளாகியும் பள்ளிக்கு வரவே இல்லை.  500 குழந்தைகள் படிக்கும் பள்ளியில் செல்லிக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இதன்  காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். செல்லிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவளை மறுபடியும் பள்ளிக்கு வரவ ழைக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் கோப மாக தலைமை ஆசிரியர் அறையை நோக்கி நடந்தாள் அமுதா.