tamilnadu

img

பிச்சாவரத்தில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலா பயணிகள்

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது. இந்த இடத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது.இந்த சதுப்பு நிலக்காடுகளில் பள்ளி, கல்லூரி விடுமுறை காலங்களில் படகு சவாரி செய்து இயற்கை வளங்களை ரசித்து செல்ல தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். பள்ளி கல்லூரி விடுமுறை காலங்களில் பிள்ளைகளை ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடையை குளிர்விக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றால் அதிகம் செலவு ஆகும் என கருதும் பெற்றோர்கள். ஏழை எளிய மக்கள் பிச்சாவரத்தை ஏழைகளின் ஊட்டியாக கருதி இங்கு வந்து செல்கிறார்கள்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலாத் துறை மூலம் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது. இதனை சுற்றுலா பயணிகள் வரவேற்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் தினந்தோறும் அதிகரித்தவாரே உள்ளது.இந்த நிலையில், 6 மாதத்திற்கு மேலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாண்ட் பழுதாகி உள்ளது. இதனால் பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வெய்யிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தண்ணீருக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக விலைகொடுத்து தண்ணீரை வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


குடிநீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. சுற்றுலா மையத்திலுள்ள மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால் காய்ந்து வருகிறது. சுற்றுலா மையத்தை மேம்படுத்தும் வகையில் புதிய மரங்களை நடுவது, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குறைந்த விலையில் உணவு, நல்ல குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யாமல் அதில் வரும் வருமானத்தை மட்டும் அனுபவித்து வருகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் கோடை விடுமுறை காலங்களில் படகு சவாரி செய்ய வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா மையம் பராமரிப்பு இல்லாமல் சீரழிவை நோக்கி செல்கிறது என்று வெளிப்படையாக பேசிக்கொள்ளும் நிலையை பார்க்கமுடிகிறது.சுற்றுலா பயணிகளின் புகார்கள் குறித்து அந்த பகுதிகளில் உள்ளவர்களிடம் கேட்டபோது,“ அனைத்தும் உண்மைதான். பிச்சாவரத்திற்கு என்று தனியாக சுற்றுலாத் துறை மேலாளரை நியமித்து இருந்தது. அவர் மாற்றப்பட்ட பிறகு தற்போது திருக்கடையூரிலுள்ள சுற்றுலா மேலாளரை கூடுதல் பொறுப்பாக பார்த்து வருகிறார். அவரோ எப்பயாவது ஒரு நாள் வருமான கணக்கை மட்டும் பார்க்க வருவார். அவருக்கு இந்த இடத்தை பராமரிக்கவோ, பயணிகளின் குறைகளை போக்கவோ நேரம் இல்லாமல் போகிறது. எனவே விரைவில் பிச்சாவரத்திற்கு என்று தனி சுற்றுலா மேலாளரை நியமித்து தினந்தோறும் என்ன பணிகள் நடக்கிறது என்று ஆய்வு செய்ய சுற்றுலா பயணிகள் கூறும் குறைகளை சரிசெய்து, சீரழிவை நோக்கிச் செல்லும் சுற்றுலா மையத்தை சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகளை செய்து சுற்றுலா மையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


காளிதாஸ்