செங்கமங்கலம் பகுதிக்கு பேருந்து வசதி
எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர், ஜுன் 13- பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் வழியாக வடகாடு கிராமத்திற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த தடம் எண்-2 நகரப் பேருந்து, இடைப்பட்ட காலத்தில் செங்கமங்கலம் கிராமத்திற்குள் செல்லாமல் நேரடியாக ஆவணம், நெடுவாசல் வழியாக வடகாடுக்கு இயக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் அலுவலகப் பணி, கடை வேலை, மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பேராவூரணி வந்துவிட்டு முதன்மைச் சாலையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செங்கமங்கலம் கிராமத்திற்குள் இறங்கிச் செல்ல பெண்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஏற்பாட்டில், மீண்டும் செங்கமங்கலம் வழியாக நகரப் பேருந்து இயக்கப்படுகிறது. இதனை வியாழக்கிழமை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.