இரவு நேரங்களில் உடற்கூராய்வு செய்யக்கூடாது அது சட்டத்திற்கு புறம்பானது என சமூகவலைதளங்களில் பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்ப்புக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்:
'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது' என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
2021 நவம்பர் 15ஆம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது. என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
