சென்னை, மே 11- கை விரல்கள் இரண்டுதுண்டானாலும் பரவாயில்லை. ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தால் அவற்றை இணைக்கலாம் என்று ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரியில் உலக அளவில் பெயர் பெற்றது. இந்த மருத்துவமனையில் கை விரல்கள் மற்றும் கை துண்டிக்கப்பட்டாலும் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் அதனை ஒட்ட வைத்து விடலாம்.இது குறித்து மருத்துவமனை முதல்வர் பொன்னம்பலம் நமசிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழகத்திலேயே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தான் 1971ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவு தொடங்கப்பட்டது. இங்கு ஒரு வருடத்திற்கு 6500பேருக்கு கை அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பெருவிரல் நசுங்கி சேதமானால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. இதனை சரிசெய்ய முடிவுசெய்து அடிபட்டு வருபவர்களை காக்க வைக்காமல் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெருவிரல் சேதமானால் அதற்கு கால் விரலோ, கை விரல்களையோ அதற்கு பதிலாக பொருத்தப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 88 பேருக்கு இந்த பெருவிரல் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் உடலிலிருந்து ஒரு பகுதியில் எலும்பையும்சதையையும் எடுத்து பெருவிரல் மாதிரி அறுவை சிகிச்சை செய்து உள்ளோம். மிகவும் நுண்ணியதாக இந்த சர்ஜரி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.