tamilnadu

img

ஜி.ஸ்டாலின் கைதுக்கு விதொச கண்டனம்

சென்னை:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகியும், நாகை மாவட்டச் செயலாளருமான ஜி.ஸ்டாலினை மயிலாடுதுறை சரக காவல்துறையினர் நள்ளிரவில் அராஜகமாக கைது செய்யப்பட்டுள்ளதற்கு விவசாயத் தொழி லாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தலாம் வட்டம் காஞ்சிவாய் கிராமத்தில் செங்கொடி இயக்கத்தின் மூத்த தலைவர்களான சம்பா இராமசாமி, நல்லக்கண்ணு நினைவு தினம் (23.9.2019) அன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் ஜி.ஸ்டாலின் காவல்துறையை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் புனைந்து திங்கட்கிழமையன்று நள்ளிரவில் அவரது வீட்டிற்குச் சென்று, அத்துமீறி அராஜகமாக கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். காவல்துறையினரின் இந்த அத்துமீறல் நடவடிக்கையை விதொச மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது - வழக்கு நடவடிக்கை உடன் கைவிட்டு ஸ்டாலினை உடன் விடுதலைல செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மயிலாடுதுறை வட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்காக விவசாயிகளுக்காக நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், தரைக்கடை வியாபாரிகளுக்காகவும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை செங்கொடி இயக்கம் நடத்தி வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ளாத மயிலாடுதுறை காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்குப் புனைவதும், சிறையிலடைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கையை சரகக் காவல்துறையினர் கைவிட வேண்டும்.இவ்வாறு சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.