கோவையில் இளைஞர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை ஆத்துப்பாலம், கரும்புக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கரும்புக்கடை காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் whatsapp குழு அமைத்து அதன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், கோவையைச் சேர்ந்த நவ்ஃபல், முகமது சபீர், அனீஸ், சனுப்பு, ரிஸ்வான், மன்சூர், சர்ச்சு, கருமுஜி, முஜிபூர் ரஹ்மான் ஆகிய 10 பேரை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. பிடிபட்ட பிரகாஷ் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகப் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 2021 -ல் கைது செய்தனர். மேலும் அவரை சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் பிரகாஷ் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதேபோல் நான்கு மாதத்திற்கு முன்பு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரியும் பிணையில் சென்று இருந்தார். இதனால் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபர் போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை கொரியர் மூலமாகச் சேலத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் முகவரிக்கு பார்சலை அனுப்பியுள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட பிரகாஷ் கோவை ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளை குறி வைத்து, சக இளைஞர்களுடன் சேர்ந்து போதை மாத்திரைகள், கஞ்சா, சிரஞ்சுகள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 510 மாத்திரைகள், கஞ்சா, சிரஞ்சுகள் மற்றும் 7 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 10 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் குஜராத் மாநிலத்தில் இருந்து போதைப் பொருட்களை அனுப்பிய நபர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.