சென்னை பெருநகர மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் தலையிட வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி,சுகுமாறன் ஆகியோர் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், தனியார்மய நடவடிக்கையை எதிர்த்தும், தூய்மை பணியாளர்கள் பத்து நாட்களுக்கும் மேலாக பெருநகர மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்துகொள்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர மாநகராட்சியில் தனியார் மய நடவடிக்கையினை மேற்கொண்ட போது, சிஐடியு செங்கொடி சங்கம் நடத்திய போராட்டத்தின் போது என்.யு.எல்.எம். தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த கோரி மாநகராட்சிக்கு ஆணையருக்கு இன்றைய முதல்வர் அவர்கள், இன்றைய அமைச்சர்கள் ம.சுப்பரமணியன் மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மூலமாக கடிதம் கொடுத்ததை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது.
மேலும் 2021 சட்டமன்ற தேர்லின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண்.285. ஊராட்சிகள், அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு மாணவர் விடுதிகள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த போராட்டத்தில் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கையாகும்.
சென்னை பெரு நகர மாநகராட்சியின் இந்த தனியார்மய நடவடிக்கையால் 5 மற்றும் 6ஆவது மண்டலங்களில் பணிபுரிந்த 1953 தூய்மை பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் தனது பொறுப்பை தட்டிக்கழித்தது. இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் திடீரென "வேலை இல்லை, நீங்கள் வீட்டுக்கு போக வேண்டும் அல்லது ராம்கி என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்" என்று கூறியுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் இந்த தூய்மை பணியாளர்களை எந்தவித பணி தொடர்ச்சி. சட்டபாதுகாப்பும் இன்றி. தனியார் நிறுவனத்தின் பணி செய்ய நிர்ப்பந்தம் செய்வது சட்டத்திற்கும். இயற்கை நியதிக்கும் எதிரானதாகும்.
இந்த பிரச்சனையானது சென்னை மாநகரட்சி மட்டுமல்ல, மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும் தூய்மைப்பணியினை தனியார் வசம் ஒப்படைக்கும் வகையில் அரசாணைகள் வெளியிடப்பட்டதின் விளைவாகும் என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தூய்மைப்பணியானது நிரந்தத்தன்மையுள்ள பணியாகும். நிரந்தர தன்மையுள்ள பணிகளை ஒப்பந்த முறையில் தனியார் மூலம் செய்வது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல.
உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியை தனியார்மயப்படுத்தும் அரசாணைகளை திரும்பபெறவும், சென்னை பெருநகர மாநகராட்சியில் மண்டல வாரியாக தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும். 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவுமான கோரிக்கைகள் மீது முதலமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டுமென சிஐடியு வலியுறுத்துகிறது.