சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல என்றும் இப்பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண அரசு தலையிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். 15ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம், சட்டத்திற்கு புறம்பான பணி நிலைமைகள், அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் என்று ஒடுக்குமுறைகளை ஏவி வருகிறது. இந்த நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் சேர்ந்து சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும் தொழிலாளர் நலத்துறை சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது. இதை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் ஒரு வார காலத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இந்தநிலையில் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிஐடியு மட்டுமின்றி, ஏஐடியுசி, ஏ.ஐ.யு.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ். எல்.டி.யு.சி உட்பட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து இன்று ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு வள்ளுவர் கோட்டம் அருகே அனுமதி கோரியிருந்தனர். இன்று காலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதோடு வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிலும் காவல்துறையினரை குவித்து போராட்டத்திற்கு வந்தவர்களை போராட்டம் நடக்கும் இடத்திற்கு அனுமதிக்காமல் முரட்டுத்தனமாக நடந்துள்ளனர். போராட்டத்திற்குச் சென்ற சிஐடியு மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் தோழர் ஜி. சுகுமாறன், எஸ். கண்ணன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகுமார் உள்ளிட்ட தலைவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தவிடாமல் கைது செய்துள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்வதாகும். அரசமைப்புச் சட்டம் சங்கம் சேரும் உரிமையை வழங்கியுள்ளது. அதை மறுப்பதும், அதற்காக அமைதியாக போராடுபவர்களை கைது செய்வதும் போராட்டங்களை சீர்குலைப்பதும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான செயல்களாகும். அரசமைப்புச் சட்டத்தை ஒன்றிய அரசிடமிருந்து காப்பாற்றுவது மட்டுமல்ல, கொரியன் முதலாளிகளிடமிருந்தே காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. இந்த பின்னணியில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, தொழிற்சங்க தலைவர்களை கைது செய்துள்ள தமிழக அரசின் அணுகுமுறை ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானதாகும்.
முதலீடுகளை ஈர்க்க வேண்டுமென்கிற தமிழக அரசின் விருப்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொள்கிறது. மூலதன வருகை என்பதே மாநிலத்தின் நலன், தொழிலாளர் நலன் என்பதிலிருந்து தான். அவற்றை மறுத்துவிட்டு மூதலீடுகள் வருவது என்பது நோக்கத்தை நிறைவு செய்யாது. இந்த பகுதியில் சிஐடியு தலைமை தாங்கியுள்ள 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. அங்கெல்லாம் எந்த பிரச்சனையும் ஏற்பட்டது கிடையாது. முதலீடுகள் வருவதற்கு சங்கம் வைப்பது தடையாகவும் இல்லை.
எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க சட்டப்படியான தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்றும், சட்டப்படியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும்முறையில் காவல்துறை நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த பிரச்சனையில் சுமூகத் தீர்வு காண அரசு தலையிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.