தமிழக வேளான் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தருமபுரியில் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் வாலிபர் சங்க பயிலரங்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. அதில், சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்சன் திட்டம் பயன்தராது என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிதிநிலை அறிக்கையில் பழைய பென்சன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். அரசு போக்குவரத்து துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுக்கால பலன்களை அதிமுக ஆட்சியில் வழங்கவில்லை. இதனால், அவர்கள் மிக மோசமான வாழ்வாதார நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிலர் இறந்து விட்டனர்.
அதனால் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பணப்பலன்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். திமுகவின் தேர்தல் வாக்குறியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறுகுறு தொழில்கள் தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ளது. மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே, தமிழக அரசு மூலப்பொருட்களை வாங்கி மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேலும், ஒன்றிய மோடி அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.27 ஆயிரம் கோடியை விடுவிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.
அதனைதொடர்ந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய மோடி அரசு வழங்க வேண்டும். தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிப்காட் அமைப்பதற்காக நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும். எனவே தரிசு, மேய்ச்சல் நிலங்களை சிப்காட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மேகதாது அணை அமைக்கக்கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை மாநில அரசுடன் சேர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு இதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேகதாது அணைகட்டுவது, ஹிஜாப் அணிய தடைவிதிப்பது போன்ற செயல்களில் கர்நாடகா பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே, மேகதாது அணை கட்டுவதை தடுக்க, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுவங்கிகளில் வழங்கிய குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சுற்றுச்சுழல் பாதிப்பின் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உரக்கொள்கை காரணமாக பலமடங்கு உரம் விலை உயர்ந்துள்ளது. எனவே ஒன்றிய அரசை வற்புறுத்தி உரவிலை மானியத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மானிய விலையில் உரம் கிடைப்பதன் மூலம் விவசாயம் பெருகும். இதற்கு தமிழக வேளான் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.
இப்பேட்டியின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநில துணைச் செயலாளர் பால சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.