சென்னை:
சென்னையை சுற்றியுள்ள 17 பகுதிகளில் ஆய்வு செய்து பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற உள்ளதாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஆக.31) கேள்வி நேரத்தின் போது எஸ்.ஆர்.ராஜா (திமுக) தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம் பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதிக்கு பாதாளச் சாக்கடை திட்டம் அமைத்து கொடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு இந்த ஆண்டில் ஓசூர், தூத்துக் குடி, கோவை, நாகர்கோவில் ஆகிய 4 மாநகராட்சிகள், செங்கற்பட்டு நகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பீர்க்கங்கரனை, பெருங்களத்தூர், சிட்லப்பாக்கம், மாடம் பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் ஆகிய 7 பேரூராட்சிகள், சென்னை மாநகரத்தில் 17 பகுதிகளில் ஆய்வு செய்து 3,940 கோடி ரூபாயில் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.கேள்விநேரத்தில் இடம்பெற்ற இதர கேள்விகள் மற்றும் பதில்கள் வருமாறு;
கனிமங்கள் கடத்தலைதடுக்க புதிய விதிமுறைகள்!
ஜெ.ஜெ.பிரின்ஸ்(காங்.): மலைகள், வனங்களால் இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கடத்தப்படுவதை தடுத்து இயற்கை அழகை பாதுகாக்கும் என்று மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அரசு நிறைவேற்றி கொடுக்குமா?
அமைச்சர் துரைமுருகன்: குமரி மாவட்டத்தில் மட்டும்தான் உயரத்திலுள்ள கற்கலை செதுக்கி எடுக்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் அப்படி கிடையாது. அனைத்தும் தரைப்பகுதியில், கடல்பகுதியில்தான் கற்களை வெட்டிஎடுப்பார்கள். கற்கள் மட்டுமல்ல எம்.சாண்ட் எனப்படும் மணலும் கடத்தப்படுகிறது. இவற்றை தடுக்க சட்டம் இல்லை. எனவே, புதிதாக விதிகளை உருவாக்கி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொறியியல் படிப்புக்கு வரவேற்பில்லை!
செந்தில்குமார் (அதிமுக): ஏழை மாணவர்கள் அதிகம் உள்ளதால் தனியார் கல்லூரிகளில் பணம் கட்டி படிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி தொகுதியில் அரசு சார்பில் ஒரு பொறியியல் கல்லூரி துவங்க வேண்டும்.
அமைச்சர் க.பொன்முடி: அந்த மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளுடன் தனியார் சுயநிதிக் கல்லூரிகள் உள்ளது. கடந்த ஆண் டில்கூட அரசு ஒதுக்கீட்டில் 914 இடங்கள் காலியாக உள்ளது. எனவே,புதிய அரசு சார்பில் ஒரு கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ப.தனபால் (அதிமுக): அவிநாசி தொகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று துவக்கப்படுமா?அமைச்சர்: தற்போது பொறியியல் கல்லூரிகள் அரசு தரப்பில் துவங்குவதற்கான சூழ்நிலைகள் இல்லை. காரணம், அரசின் நிதிநெருக்கடி ஒரு புறம் இருந்தாலும், மாணவர்கள் சேர்க்கையும் குறைவாக இருக்கிறது. போதுமான ஆர்வம் காட்டுவதில்லை. படிப்பை முடித்தவர்களும் வேலையை தேடிக்கொண்டிருக்கிறார்கள். கலை-அறிவியல் பாடப்பிரிவுகளுக்குதான் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே, வருகிற காலங்களில் வளர்ச்சிக்கு ஏற்ப அரசு முடிவு செய்யும்.