tamilnadu

பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை கைவிடக்கூடாது.... பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்.....

சென்னை:
பள்ளிக் கல்வித் துறையில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை இன்று பறிமுதல் செய்யும் அநீதியை முதல் வர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத் தலைவர் அ.மாயவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை இருந்து வரும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை இன்றைய தமிழக அரசு பறிமுதல் செய்து அதற்குப் பதிலாக ஒரு ஐ,ஏ.எஸ். அதிகாரியை பள்ளிக் கல்வி ஆணையராக நியமித்திருக்கும் அநீதியை அரங் கேற்றியுள்ளது. பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை ரத்து செய்து, அவ்விடத்தில் ஆணையர் என்ற பெயரில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிப்பதை தமிழக ஆசிரியர் சமுதாயம் ஒரு போதும் ஏற்காது என்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பள்ளிக் கல்வி இயக்குநருக்கு மேல், பள்ளிக் கல்வித் துறைக்கு, அரசு முதன்மைச் செயலாளர் என்ற பெயரில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இருக்கும்போது மேலும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவையில்லை என்பதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தமிழகத்தின் முதலமைச்சர்களாகப் பணியாற்றிய பெருந்தலைவர் காமராசர், பக்தவச்சலம், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் மதித்துப் போற்றிய பள்ளிக் கல்வி இயக்குநர் பதவியை பறிப்பதற்கு ஒருபோதும் தற்போதைய முதல்வர் அனுமதிக்கக் கூடாது.கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை அகற்றுவதற்குப் பதிலாக அதை அலங்கரிக்கும் பணியில் தங்கள் அரசு ஒருபோதும் ஈடுபடாது என்று ஆசிரியர் சமுதாயம் நம்புகிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.