tamilnadu

அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குக: பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்....

சென்னை:
ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் எனவும், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டாதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிறுவனத் தலைவர் அ.மாயவன், மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொதுச்செயலாளர் எஸ்.சேதுசெல்வம், பொருளாளர் சி.ஜெயக் குமார் ஆகியோர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதிய அரசின் புதிய பட்ஜெட்டை நிதியமைச்சர் கடந்த 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்ப் பித்தார். புதிய அரசின் இந்த புதிய பட்ஜெட் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே பரிசாக அளித்துள்ளது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஒரு வார்த்தைகூட பட்ஜெட்டில் இல்லை. அகவிலைப் படி உயர்வு தற்போது இல்லை என்று கைவிரித்துவிட்டார். ஆசிரியர் அரசு ஊழியர்களின் நியாயமான, முக்கியமான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த பட்ஜெட் நிராகரித்துள்ளது. இவைகளை ஆசிரியர், அரசு ஊழியர் சமுதாயம் ஒரு போதும் ஏற்காது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே முதல்வர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்திட வேண்டுகிறோம். அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போடுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது. எனவே பட்ஜெட் விவாதங்களுக்கு நிதியமைச்சர் பதில் அளிக்கும்போது, முதல்வர் விதி 110 - ஐ பயன்படுத்தி, இந்தாண்டு (2021) ஜூலை முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்துவது பற்றிய அறிவிப்பையும் சட்டப்பேரவையில் தாங்கள் உடனடியாக அறிவிக்குமாறு தங்களை மிகவும் கனிவுடனும், அன்புடனும் வேண்டுகிறோம்.அதே நேரத்தில், ஆசிரியர், அரசு ஊழியராகப் பணிபுரியும் அனைத்து மகளிர்களுக்கும் மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை மனதார வாழ்த்தி, பாராட்டி வரவேற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.