அரியலூரில் ரூ.2.27 கோடியில் 19 வளர்ச்சித் திட்ட பணிகள்: போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
அரியலூர், மே 13- அரியலூர் மாவட்டத்தில் புதிய நியாய விலை கட்டடம், புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, சிமெண்ட் சாலை அமைத்தல் என ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பில் 19 வளர்ச்சி திட்ட பணிகளை போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்தும், தொடங்கியும் வைத்தார். இதில் கிளிமங்கலம், கீழ மாளிகை, பாளையக்குடி கிராமங்களில் உள்ள மூன்று ஏரிகளை ரூ.36 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், கிளிமங்கலம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம் ஆகிய கிராமங்களில் ரூ. 50 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார். மேலும், குமிழியம் கிராமத்தில் சுகாதார மையத்தில் கூடுதல் கட்டிடத்தினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனையடுத்து வீராக்கன், கீழமாளிகை கிராமங்களில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும்பணி, கீழமாளிகை, மத்துமடக்கி பகுதிகளில் 15 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் என இரண்டு கோடியே 27 லட்சம் மதிப்பிலான 19 வளர்ச்சி திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சருமான சிவசங்கர் திறந்து வைத்து, பணிகளை தொடங்கியும் வைத்தார். பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.