பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி
திருவாரூர், மே 13- பஞ்சாப் மாநிலம் பாட்டியலாவில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற திருவாரூர் மாவட்ட பள்ளி மாணவர்களை, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் செளம்யா நேரில் அழைத்து வாழ்த்தி, பாராட்டு தெரிவித்தார். நிகழ்வில் நேர்முக உதவியாளர் ஜெயசித்ரா மற்றும் காட்டூர் தியாகராஜா கல்வியியல் கல்லூரி தாளாளர் ந.கணேசன், திருவாரூர் மாவட்ட வில் வித்தை சங்கத்தின் பொருளாளர் நெப்போலியன், ரைபில் சூட்டிங் பயிற்சியாளர் குணசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 215 பேர் மனு அளித்தனர். அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்திடுமாறும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அறந்தாங்கி அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்
அறந்தாங்கி, மே 13- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இணைய தளம் வழியாக மே 7 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கணினி அறிவியல், பி.எஸ்.சி இயற்பியல், பி.எஸ்.சி கணிதவியல், பி.காம், பி.பி.ஏ ஆகிய பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இப்பாடப்பிரிவுகளில் சேர விரும்புகின்ற மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் பல்வேறு அரசு கல்லூரிகளுக்கும், அவற்றில் உள்ள தகுதியுள்ள பல்வேறு பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2, பற்று அட்டை வழி செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பிக்க உதவி செய்வதற்காக கல்லூரி வளாகத்தில் மாணவர் சேர்க்கை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்
மே 16-பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூர், மே 13- பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மே 16 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில், தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் மே-2025 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இணையம் வாயிலாக வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள், தங்களுக்கு விருப்பமான துறையில், இந்த இணையதளம் வாயிலாக உரிய வேலைவாய்ப்பினை பெறலாம். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, முகாமில் தனியார் துறை நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நீதிபதியின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அறிக்கை
பாபநாசம், மே 13- மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: பொள்ளாச்சியில், இளம்பெண்களை காணொலி எடுத்து, பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பான வழக்கில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை, பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ள இந்த தீர்ப்பு மிகவும் சரியானது. பெண்களுக்கு எதிரான வன்முறையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையை அளிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவம், கடந்த அதிமுக ஆட்சியில் ஆளும் கட்சியின் பொறுப்பாளர்களே, இந்த விஷயத்தில் தொடர்பு இருந்த காரணத்தால் மெத்தனப்போக்குடன் நடைபெற்று வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை துரிதமாக நடைபெற்றது. இந்த வழக்கினை சரியான முறையில் கையாண்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், மனவலிமையுடன் சாட்சி சொன்ன, நம்பிக்கையோடு போராடிய அத்தனை பெண்களும் பாராட்டுக்குரியவர்கள். குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட்டு அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சில்வர் ஜூப்ளி பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை
மே 13- மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளி(டார்கெட்) மாணவர்கள் அரசுப் பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியளவில் ஜெ. நிகிலா 590 மதிப்பெண் பெற்று முதலிடமும், கே. சக்திப்ரியா 585 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஆர். ஆதர்ஷ் நாராயணன் 584 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். குறிப்பாக இப்பள்ளியில் தேர்வெழுதிய 225 பேரும் தேர்ச்சி பெற்றதோடு, அதில் 222 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்ணுக்கு மேல் 48 பேரும், 500-க்கு மேல் 116 மாணவர்களும், 450-க்கு மேல் 181 பேரும் 400-க்கு மேல் 215 மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். சாதனை படைத்த அனைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் டார்கெட் கல்வி குழும தலைவரும், பள்ளியின் தாளாளருமான என். மோகன்ராஜ், துணைத்தலைவர் ஆர். சட்டைநாதன், செயலர் ஜி. ராமதுரை, பொருளாளர் பி. செந்தில்குமார், இயக்குநர் சி.டி. மீனா மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகத்தினர், பெற்றோர்கள், அலுவலர்கள் வாழ்த்தினர்.