வீட்டு மனை விற்பதாக ரூ.5 லட்சம் மோசடி நடவடிக்கை எடுக்க இளைஞர் கோரிக்கை
மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், தில்லையாடியில் வீட்டுமனை விற்பதாகக் கூறி, கூலித் தொழிலாளியான இளைஞரிடம் 5 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏமாற்றி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் மனு அனுப்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பாபாநாசம் எஸ்.பி.ஜி மிஷன் தெருவில் வசிக்கும் ஜாஷ்வா ஆண்ட்ரூஸ் என்பவர், தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த ரெபேக்காள் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்த பிறகு, தனது சொந்த ஊரில் தனி வீடு கட்டி வசிக்க போதிய இடம் இல்லாததால் தனது மனைவியின் ஊரான தில்லையாடியில் இடம் வாங்கி குடியிருக்கலாம் என முடிவு செய்து வட்டிக்கு கடன் வாங்கி, வீட்டு மனை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தில்லையாடி காந்தி நகரில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் மனைவி ராணி, தில்லையாடி மெயின் ரோடு பகுதியில் வீட்டுமனை இருப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் பணத்தை ஜாஷ்வா ஆண்ட்ரூஸ் - ரெபேக்காள் தம்பதியிடம் பெற்றுள்ளார். விரைவிலேயே அந்த இடத்தில் குடிசையை கட்டி வசிக்கலாம் என நினைத்த இளம் தம்பதியினருக்கு, ராணி இடத்திற்கான பத்திரப் பதிவு செய்து தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததோடு, “நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் எதிர்ப்பு வரும். இந்த இடத்தில் நீங்கள் வசிக்க முடியாது” என முரண்பாடாக கூறியுள்ளார். ஒரு ஆண்டுக்கும் மேலாக வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு கூலி வேலை செய்து வருகிறார் ஜாஷ்வா. இதனிடையே, பாதிக்கப்பட்ட ஜாஷ்வா ஆண்ட்ரூஸ், தனது உறவினர்களுடன் சென்று ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய ராணி என்பவரின் இடத்தில் குடிசைக் கட்டி குடியேறியுள்ளனர். மேலும், தன்னிடம் வாங்கிய பணத்திற்கு வீட்டுமனையை பத்திரப் பதிவு செய்து பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு பாதிக்கப்பட்ட தம்பதியினர் மனு அனுப்பியுள்ளனர்.