மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
புதுக்கோட்டை, மே 13- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 455 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,18,500 மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கபட்டோர்க்கான பிரத்யேகமான வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,500 மதிப்பிலான கைதாங்கியும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 மதிப்பிலான காலிப்பரும் என மொத்தம் ரூ.1,50,000 மதிப்பிலான உதவி உபகரணங்களை 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.