பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு அ.தி.மு.க நிர்வாகியைக் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததுடன், அதைக் காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலிடம் சிக்கிய மாணவி ஒருவர் கதறி அழும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அ.தி.மு.கவைச் சேர்ந்த பலர் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்பு கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கை அடுத்த ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2019 ஆம் ஆண்டு ஐந்து பேரும், கடந்த ஜனவரி மாதம் அ.தி.மு.க பிரமுகர் உட்பட மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் பொள்ளாச்சியை அடுத்த கிட்டசூரம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (29), என்பவரை சி.பி.ஐ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி பணிக்கம்பட்டி என்றழைக்கப்படும் கிட்டசூரம்பாளையம் பகுதியிலுள்ள முருகானந்தம் என்பவரின் மகன் அருண்குமார். இவர் இந்த வழக்கில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட சதீஷ்குமாருடன் இணைந்து துணிக்கடை நடத்திவந்துள்ளார். மேலும், அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் உள்ளார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண் அருண்குமாரும் தன்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்திருந்ததாகத் தகவல் வெளியானது.
அதன் அடிப்படையில் விசாரித்துவந்த சி.பி.ஐ., அருண்குமாரை நேற்று கைதுசெய்தது. இதையடுத்து, அவரை கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.