பகுதிநேர ஆசிரியர் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு!
சென்னை, ஜன. 14 - தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 12 ஆயிரத்து 500 இலிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஜனவரி 14 அன்று பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் சென்னையில் செய்தியாளர்களு டன் பேசிய அமைச்சர், “எஸ்எஸ்ஏ திட்டத்தில், தமிழ கத்திற்குத் தரவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தொடர்ந்து தர மறுக்கிறது. எனினும் ஆசிரியர் களுக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் உறுதுணை யாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ. 12 ஆயிரத்து 500-இலிருந்து ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் இனி மே மாதத்தில் ரூ. 10 ஆயிரம் ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். “பணி நிரந்தரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம். அவர்களும் சில கருத்து களைத் தெரிவித்திருக்கிறார்கள். பணியின்போது இறந்த 200 இடைநிலை ஆசிரியர்களின் இறப்புக்கும் ஏதாவது நிதியுதவி செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.