பாஜகவினரின் முஸ்லிம் வெறுப்புப் பேச்சுகள் சுமார் 100% அதிகரிப்பு
புதுதில்லி, ஜன.16 - ‘இந்தியா ஹேட் லேப்’ அமைப்பு 2025 இல் இந்தியா முழுவதும் நடைபெற்ற மத வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பான 100 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மை யினர் குறிப்பாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை குறிவைத்து 1,318 மத வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் கடந்த ஆண்டு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 100 சதவீதம் அதிகரிப்பு அதாவது 2025 இல் சராசரியாக நாளொன்றுக்கு நான்கு வெறுப்புப் பேச்சு சம்ப வங்கள் நடந்துள்ளன. 2024 ஆம் ஆண்டை விட 13 சதவிகிதம் அதிகமான வெறுப்புப் பேச்சுக்கள் பதிவாகியுள்ளன. அதோடு 668 வெறுப்புப் பேச்சுக்கள் பதிவான 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 97 சதவிகிதம் அதிகமாகும். பதிவான மொத்த சம்பவங்களில் 1,289 (98%) வெறுப்புப் பேச்சுக்கள் முஸ்லிம்களை குறிவைத்து நடந்தவை. அதில் 1,156 வெறுப்பு பேச்சுக்கள் முஸ்லிம்களை நேரடியாகவும், 133 சம்பவங்கள் கிறிஸ்தவர்களுடன் இணைத்தும் வெறுப்புப் பிரச்சாரம் செய்யப்பட்டவை. அதேபோல், 162 நிகழ்வுகளில் கிறிஸ்த வர்களை குறிவைத்து வெறுப்புப் பிரச்சாரம் நடந்துள்ளது. இது 2024-இல் கிறிஸ்தவர் களுக்கு எதிராக பதிவான 115 சம்பவங்களை விட 41 சதவிகிதமாகும். முஸ்லிம்களுக்கு எதி ராக நடத்தப்படுவதைப் போலவே கிறிஸ்த வர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வரு வதையே இந்த எண்ணிக்கை காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில்... இத்தகைய மதவெறுப்புப் பேச்சுக்கள் நாடு முழுவதும் பதிவாகி வந்தாலும் ஆய்வு செய்யப்பட்ட 23 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில், பாஜக ஆளும் மாநிலங் களிலேயே அதிகமாக பதிவாகி வருகிறது. 1,164 (88%) வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணியாகவோ ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்துள்ளன. இது 2024 ஆம் ஆண்டை விட 25% அதிகமாகும். அதாவது உத்தரப்பிரதேசத்தில் 266, மகாராஷ்டிராவில் 193, மத்தியப் பிரதேசத்தில் 172, உத்தரகண்ட்டில் 155, தில்லியில் 76 சம்ப வங்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங் களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் அல்லது அக்கட்சியின் முன்னணித் தலைவர்களாகவே உள்ளனர். உத்தரகண்ட் முதல்வர் 71 முறை வெறுப்புப் பேச்சு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மட்டுமே 71 முறை மதவெறுப்பு பிரச்சாரங் களை நேரடியாகச் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் 2025-இல் 154 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் பதிவாகி யுள்ளன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் 40 மதவெறுப்பு பேச்சுக்கள் பதிவாகியுள்ளன. பதிவான வெறுப்புப் பிரச்சாரத்தில் சுமார் 50 சதவிகிதம் அதாவது 656 பேச்சுகள் “லவ் ஜிகாத்”, “லேண்ட் ஜிகாத்”, “மக்கள்தொகை ஜிகாத்” போன்ற சதித் திட்டக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. 308 பேச்சு கள் மதச்சிறுபான்மையினருக்கு எதிராக நேரடி வன்முறைக்கு அழைப்பு விடுத்தவை. விஎச்பி, பஜ்ரங்தளம் இந்த மத வெறுப்புப் பேச்சுக்களை பேசு வதற்காகவே ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வு களில் சுமார் 289 நிகழ்வுகளை விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய இந்த இரு அமைப்புகளும் ஒருங்கிணைத்துள்ளன. குறிப்பாக ராம நவமி ஊர்வலங்களை இந்த மதவெறுப்புப் பிரச்சாரத்தின் மேடையாக பயன்படுத்துகின்றனர். அந்த ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 158 வெறுப்புப் பேச்சுக்கள் பதிவாகியுள்ளன. பகல்காம் தாக்குதல் நடந்த ஏப்ரல் 22 முதல் மே 7 வரையிலான 16 நாட்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக 98 மத வெறுப்புப் பிரச்சாரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. தரவுகள் வழங்க மறுப்பு எனினும் இந்த சம்பவங்கள் எதிலும் ஒன்றிய பாஜக அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘சட்டம் ஒழுங்கு’, ‘காவல்துறை’ ஆகியவை மாநிலப் பட்டியலைச் சேர்ந்தவை என்று கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான தரவுகளை வழங்க மறுத்துவிட்டார். 2025-இல் உச்சநீதிமன்றமும் இந்த விவ காரத்தில் தம் மீது கட்டுப்பாட்டு திணிக்கப் பட்டிருப்பது போல பதிலளித்து நழுவிக் கொண்டது. அதாவது நாட்டின் ஒவ்வொரு வெறுப்புப் பேச்சு நிகழ்வையும் கண்காணிக்க தாங்கள் விரும்பவில்லை என்றும், மனு தாரர்கள் உயர் நீதிமன்றங்களை அணுகலாம் என்றும் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது. வெறுப்புப் பேச்சு தடுப்பு : கர்நாடகத்தில் சட்டம் வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க கர்நாடக அரசு ‘கர்நாடக வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் (தடுப்பு) மசோதா, 2025’ஐ நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு பல பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இச்சட்டம் மூலம் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 ரூபாய் அப ராதமும் விதிக்கப்படும். இது மாநில அளவில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான சட்ட நட வடிக்கையாக ‘இந்தியா ஹேட் லேப்’ அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
