tamilnadu

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பிக்கும் முறைகள்

சென்னை.மே,16-கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ன் படி சிறுபான்மையின பள்ளிகளை தவிர்த்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகித இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கிட

வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான போக்கு தொடர்ந்ததால், இணையவழி விண்ணப்பிக்கும் முறைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இன்னமும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படவில்லை. இந்தாண்டு 1.21 லட்சம் இடங்கள் மாநிலம் முழுவதும் உள்ளது. இணையவழி விண்ணப்பங்கள் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கி மே 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வரையில் 97,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இணையத்தில் பதிவுசெய்யும் போது, 1.குழந்தையின் புகைப்படம், 2. பிறப்புச் சான்றிதழ்,  3. இருப்பிட அடையாள அட்டை ஆகியவற்றை ஸ்கேன் செய்து இணைக்க வேண்டும். இணைய விண்ணப்பத்தில் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் என மூன்று வகை இருக்கும். எந்த பிரிவில்விண்ணப்பிக்க விரும்புகிறீரோ அதற்கான சான்றிதழையும் இணைக்க வேண்டும். நலிவடைந்தோர் பிரிவு - வருமான சான்றிதழ் ( ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்) வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிரிவு - சாதிச் சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவு-ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவு தொழிலாளி ஆகியோரின் குழந்தை எனில் அதற்கான சான்றிதழ். உங்கள் வீட்டிலிருந்து 1 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளிகளில் 5 பள்ளிகளை விண்ணப்பத்தில் தேர்வு செய்யலாம். http://rte.tnschools.gov.in/tamil-nadu/student-registration என்ற முகவரியில் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு rtetnqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 14417 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கால

கட்டத்தை நீட்டிக்கவும் சிபிஎஸ்இ பள்ளிகளை பட்டியலில் இணைக்க வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.