ஒன்றிய அரசின் வரி அதிகமாக இருப்பதால் பெட்ரோல், டீசல் மீதான வரி அளவை மாநில அரசு குறைப்பது சாத்தியமில்லை என தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை – பெட்ரோல், டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில் மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது சாத்தியமில்லை என தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது ஒன்றிய அரசு விதித்த வரி ரூபாய் 9.48 காசுகள், மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி ரூபாய் 15.67 காசுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2014ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 75.74 காசுகளாக இருந்தன. மேலும் டீசல் மீது ஒன்றிய அரசு விதித்த வரி ரூபாய் 3.57 காசுகள், மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி ரூபாய் 10.25 காசுகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் 2014ல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 62.27 காசுகளாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி ரூபாய் 32.90 காசுகளாகவும் அது குறைக்கப்பட்ட பிறகு நவம்பர் 4 ஆம் தேதி ரூபாய் 27.90 காசுகளாக தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி ரூபாய் 31.80 காசுகளிலிருந்து ரூபாய் 21.80 காசுகளாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு வரியை ஒன்றிய அரசு குறைத்துக் கொண்டால் மாநில அரசின் வரி விதிப்பும் தானாகவே குறைந்துவிடும். ஒன்றிய அரசின் வரி இன்னும் அதிகமாக தொடரும் நிலையில் மாநில அரசின் வரியை மேலும் குறைப்பது நியாமும் அல்ல, சாத்தியமும் அல்ல என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.