ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்களும், மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்கள் என 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற பிரிவினர் 42-க்குள்ளும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எனவே ஆர்வமுள்ள நபர்கள் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.