“அன்புள்ள தோழர் பாலு சாருக்கு, நண்பன் தமிழ்ஒளி வணக்கம். நலம் , நான் புலவர் கல்லூரியில் படிக்க வந்ததன் நோக்கம் சங்க நூல்களை கற்க. ஒரு சிறந்த கவிஞனாக, புரட்சி எழுத்தாளனாக, சமுதாயத் தொண்டனாக ஆக வேண்டும் என்னும் விருப்பந்தான். ஆனால் பாடத் திட்டங்களும் பயிற்றுவிக்கும் முறையும் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ் பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியனாக தொழில் புரியக் கற்பிக்கும் முறையில் உள்ளமையால் படிப்பதில் எனக்கு ஊக்கம் உண்டாகவில்லை. நீங்கள் உயிர்த் தோழராதலின் என்னுடைய கருத்தையும் விருப்பத்தையும் தெரிவிக்கிறேன். நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டுப் பின் சென்னைக்கு சென்றேன். அங்கு ஜெயகாந்தன் முதலானோர் நண்பர்களானார்கள். ஜெயகாந்தன் என்னை வழிக்காட்டியைப் போல் அன்புகொண்டு நேசித்தார். அவர் அனுபவங்களை எல்லாம் சொன்னார். குடியரசு முதலிய கவிஞர்கள், எழுத்தாளர்கள் நண்பர்களானார்கள். நமது வாழ்வின் நோக்கம் நமது சமுதாயமும் மக்களும் முன்னேற்றமடையும் முறையில் இயன்ற தொண்டு செய்வதுதான். மக்கள் அறியாமை, மூடநம்பிக்கை, வறுமை, அடிமையில் மோகம் முதலியவற்றினின்றும் நீங்கி நல்லுணர்வும் வாழ்வும் பெற ஆவன புரிய வேண்டும் என்பதுதான். அதனை தன்னலமின்றிச் செய்ய வழிகாட்டும் இயக்கம் பொதுவுடைமை இயக்கந்தான். நான் இப்பொழுது ஒரு கம்யூனிஸ்ட் தொண்டன் என்பதில் பெருமிதமடைகிறேன். உங்களையும் இந்த இயக்கத்தில் ஈடுபடுத்தி ஒரு சிறந்த தலைவனாக வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.” கவிஞர் தமிழ்ஒளி தனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதை பாவலர் ச.பாலசுந்தரம் ‘நினைவலைகள்’ என்னும் தன்வரலாற்று
குறிப்பில் பதிவு செய்துள்ளார்.