பெரணமல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி
திருவண்ணாமலை, டிச.31- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள அரியபாடி, நம்பேடு, செப்டான்குளம் மற்றும் மோச வாடி ஆகிய ஊராட்சிகளை, அதிகத் தொலை வில் உள்ள மழையூர் ஊராட்சி ஒன்றி யத்துடன் இணைக்கத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையைக் கைவிட்டு, அந்த ஊராட்சிகளைப் பெரணமல்லூர் ஒன்றியத்திலேயே நீட்டிக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டம், ஒருகட்டத்தில் காத்திருப்புப் போராட்டமாக மாறியது. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த அரசு அதிகாரிகள், கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன், “ஒரு வார காலத்திற்குள் புதிய கருத்துருவைத் தயார் செய்து, உதவி இயக்குநர் (ஊராட்சி மற்றும் தணிக்கை) மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று போராட்டக் குழுவினரிடம் எழுத்துப்பூர்வமான கடிதத்தை வழங்கினார். இதனை ஏற்றுப் போராட்டம் முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரணமல்லூர் வட்டாரச் செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், இடைக் குழு உறுப்பினர்கள் ராஜ சேகரன், முருகன், சரஸ்வதி, அறிவழகன், பார்த்திபன், கௌதம்முத்து, சந்திரிகா, கிளைச் செயலாளர்கள் பெருமாள், சிவகுருநாதன், சுப்பிரமணியன் மற்றும் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ராம தாஸ், மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஒன்றியத் துணைத்தலைவர் பாண்டுரங்கன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் வாசுகி, மாதர் சங்க ஒன்றியத் தலைவர் முனியம்மாள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
