tamilnadu

img

திறக்கப்படாமல் வீணாகும் மூங்கில்துறைப்பட்டு கழிவறை

திறக்கப்படாமல் வீணாகும் மூங்கில்துறைப்பட்டு கழிவறை

கள்ளக்குறிச்சி, டிச. 31:  மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட பொதுக் கழிவறை இன்னும் திறக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ், கடந்த ஆண்டு ரூ. 2.15 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கழிவறை கட்டப்பட்டது.  ஆனால், கட்டி முடிக்கப்பட்டுப் பல மாதங்கள் கடந்தும் அது இன்னும் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதேபோல், இந்தக் கழிவறையின் அருகே ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அந்தத் தண்ணீர் தொட்டி தற்போது கட்சி போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும், திறந்தவெளி சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறி வருகிறது.  சிறப்பு விருந்தினர்கள் யாராவது வந்து திறந்து வைக்க வேண்டும் என்பதற்காகப் பல மாதங்களாக இந்தக் கட்டடத்தைப் பூட்டி வைத்துப் பாழாக்கி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்தக் கழிவறை மற்றும் தண்ணீர் தொட்டியை உடனடியாகத் திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.