tamilnadu

img

கல்வி என்பது வீண் செலவல்ல, அது சமூக முன்னேற்றத்திற்கான முதலீடு!

கல்வி என்பது வீண் செலவல்ல,  அது சமூக முன்னேற்றத்திற்கான முதலீடு!

அரூர், டிச. 30- “கல்விக்காகச் செய்யப்படும் முதலீடு  என்பது வீண் செலவல்ல; அது ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்திற்கான மிக முக்கியமான முதலீடு” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கூறினார். தருமபுரி மாவட்டம் அரூரில், மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடை பெற்ற சட்டமன்றத் தொகுதி சிறப்பு மாநாட்டில் அவர் சிறப்புரையாற்றினார்.  அரூர் ரவுண்டானா அருகில் டிசம்பர் 29 திங்களன்று நடைபெற்ற இந்த எழுச்சி மிகு மாநாட்டிற்கு, மாவட்டச் செயலா ளர் இரா. சிசுபாலன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் பி. குமார் அனைவரை யும் வரவேற்றுப் பேசினார். மாநில செயற் குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்களான முன்னாள் எம்.எல்.ஏ பி. டில்லி பாபு, ஏ. குமார் ஆகி யோர் உரை நிகழ்த்தினர். மாணவர் விடுதி மற்றும் ஆசிரியர் உரிமைகள்  பெ.சண்முகம் தனது உரையில், சிபிஎம்  சட்டமன்ற உறுப்பினர் எடுத்த விடாமுயற்சி யால் அரூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று 900-க்கும் மேற்பட்ட ஏழை எளிய  மாணவர்கள், குறிப்பாகப் பெண் குழந்தை கள் உயர்கல்வி கற்க இது பேருதவியாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அங்கு  மாணவர் விடுதி இல்லாதது பெரும் குறை யாக உள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாகப் பழங்குடியின மாணவர்கள் கல்வி கற்க ஏதுவாக, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரி லேயே அரசு ‘சமூக நீதி விடுதி’ அமைப்ப தற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ரூ. 1லட்சம் ஊதியம் பெறும் நிரந்தர பேராசிரியர் களுக்கு இணையாகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வெறும் ரூ. 18,000 மட்டுமே வழங்கப்படுவதைச் சாடிய அவர், இவர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார். கடந்த 15 ஆண்டுகளாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கேட்டுப்  போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறை வேற்ற வேண்டும் என்றும், போராட்டக் காரர்களைக் காவல்துறை மூலம் ஒடுக்கு வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார். நில உரிமை மற்றும் பட்டா கோரிக்கைகள்  நில உரிமை குறித்துப் பேசிய பெ. சண் முகம், கடந்த 16-ஆம் தேதி சிபிஎம் தலை வர்கள் முதலமைச்சரைச் சந்தித்ததை அடுத்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா வழங்க மாநில அளவில் குழு  அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தி ருப்பதை வரவேற்றார். 60 ஆண்டு காலம் ‘பெல்ட் ஏரியா’ என்று சொல்லி நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பட்டா வழங்கா மல் இருந்த நிலையை மாற்றி, தற் போது பட்டா வழங்கலாம் என அரசு அறிவித்திருப்பது சிபிஎம் போராட்டத் திற்குக் கிடைத்த வெற்றி என்றார். நீர்நிலை  புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்குப் பட்டா வழங்கும் அர சாணையை வரவேற்ற அவர், கோவில் நிலங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள தொகை அதிகமாக இருப்பதால், ஏழை மக்கள் வாங்கும் வகையில் மார்க்கெட் விலையை முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். வனாந்தர ப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு வன உரிமைச் சட்டத்தின்படி பட்டா கிடைக்கும் வரை சிபிஎம் தொடர்ந்து போராடும் என்றார்.  ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள்  ஒன்றிய பாஜக அரசு ஏழைகளுக்கு எதி ராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை ரூ. 86 ஆயிரம் கோடியாகக் குறைத்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு ரூ. 16 லட்சம் கோடி வராக்கடனைத் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டினார். மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வி.பி.ஜி ராம் ஜி  எனப் பெயர் சூட்டுவது மக்களை ஏமாற்றும் வேலை என்றும், இயற்கை வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் பாஜகவின் போக்கினைத் தடுக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளையில், பாஜகவை தீய சக்தி  என்று சொல்ல அஞ்சும் அதிமுக மற்றும் விஜய் போன்றவர்களின் அரசியல் நிலைப் பாடுகளை அவர் கடுமையாக விமர்சித் தார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆர்எஸ்எஸ் வாத த்தை ஆதரிப்பது தமிழகத்தின் அமைதி க்குக் கேடு விளைவிக்கும் என்றார்.  உள்ளூர் வளர்ச்சிப் பணிகள்  உள்ளூர் கோரிக்கைகளாக, அரூர் காலனி அருகில் ஆக்கிரமிப்பில் உள்ள அர சனூர் ஏரியை மீட்டுத் தூர்வாரினால் தண் ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்றும், இதற்காக சிபிஎம் தொடர் போராட்டம் நடத்தும் என்றும் உறுதியளித்தார். வாச்சாத்தி தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பு களை அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்தை விரைந்து முடிக்க வும், காவிரி உபரி நீர் திட்டத்தைச் செயல் படுத்தி மாவட்ட ஏரிகளை நிரப்பவும் அவர் கேட்டுக்கொண்டார்.  மாநாட்டில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் செ. முத்துக்கண்ணன் பேசுகையில், மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பறிபோகும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். முன்னாள் எம்.எல்.ஏ பி. டில்லி பாபு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்கக் கோரினார்.  மாநாட்டில் மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் எம். முத்து, ஆர். மல்லிகா, தி. வ.தனுசன், மாவட்டக் குழு உறுப்பினர் கே. என். மல்லையன், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் கே. தங்கராஜ் உள்ளிட்ட திரளான கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.   (ந.நி.)