மலையடிகுப்பத்தில் 11-வது நாளாகத் தொடரும் காத்திருப்புப் போராட்டம்
கடலூர், டிச.31- கடலூர் ஊராட்சி ஒன்றியம் மலையடி குப்பம் கிராமத்தில், விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் 11-வது நாளாகப் புதன்கிழமையும் நீடித்தது. மலையடிகுப்பம் மற்றும் பெத்தாங்குப்பம் கிராமங்களில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு அந்த நிலத்திற்கான பட்டாவை வழங்க வேண்டும், கலைஞர் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும், முப்போகம் விளையும் நிலத்தில் காலணி தொழிற்சாலை அமைப்பதை விடுத்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் போராட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார். மேலும், விவ சாயிகள் சங்கத்தின் கடலூர் ஒன்றியச் செயலாளர் தட்சணாமூர்த்தி, மாவட்டச் செயலாளர் சரவணன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ். ஆறுமுகம், ரவிக்குமார், பாண்டுரங்கன் ஆகியோர் உரையாற்றினர். போராட்டத்தை நிறைவு செய்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ஜே. ராஜேஷ் கண்ணன் பேசினார்.
