சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பல்வேறு வகையான நிலங்களில் வாழும் மக்களுக்கு குடிமனைப் பட்டா, கிரயப்பத்திரம் வழங்கக் கோரி முதலமைச்சரிடம் ஒரு லட்சம் பேர் மனு கொடுக்கும் இயக்கம் சென்னையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க முதலமைச்சர் உறுதியளித்தார்.
இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டுமெனவும், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கொடுத்த மாற்று இடத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்கள் மற்றும் பயன்பாடற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கிட வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (16.12.2025) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கொட்டும் மழையிலும் பங்கேற்றனர்.
இவ்வியக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் சென்னை மாவட்டக்குழு செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, சென்னை மாவட்டக்குழு செயலாளர்கள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்தனர். கோரிக்கை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். கோரிக்கைகளை முழுமையாக கேட்ட முதல்வர்,
தமிழ்நாடு முழுவதும் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்திட தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் எனவும்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடிமனையில் வசிக்கும் மக்களுக்கு விதித்துள்ள வட்டி, அபராத வட்டியை ரத்து செய்து கிரயப்பத்திரம் வழங்கிட வேண்டுமெனவும், ஏற்கனவே கிரயப் பத்திரம் பெற்றவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிப்பதாகவும்,
ரயில்வே துறை, பாதுகாப்புத் துறை, வனத்துறை, கண்டோண்ட்மென்ட் உள்ளிட்ட ஒன்றிய அரசின் பயன்படாத நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமெனவும், அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கான கிரயத்தொகையை தமிழக அரசே செலுத்திட வேண்டும் எனவும் அல்லது அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு மாற்றாக வேறு இடத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிப்பதாகவும்,
கோவில் மனைகளில் குடியிருக்கும் அடிமனை வாடகைதாரர்களுக்கு அரசாணை மூலமாக கிரயம் செய்து தர உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த உத்தரவில் நகர்ப்புற பகுதிகளில் அரசு வழிகாட்டு மதிப்பு அல்லது சந்தை மதிப்பு இதில் எது அதிகமாக இருக்கிறதோ அதில் 225 சதவிகிதம், அதற்கும் அதிகமாக கிரயத் தொகை நிர்ணயித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. 2000ஆம் ஆண்டிற்கு முந்தைய அரசு வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் கிரயத்தொகையை நிர்ணயிக்கும் வகையில் அரசாணையை திருத்த வேண்டுமென கேட்டதற்கு உரிய முறையில் பரிசீலிக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
