tamilnadu

img

வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 15- வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்குமாறு பொது மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த்தொற்றாக அறிவித்துள்ளது. தமிழக அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களி லிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளி நாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளி நாட்டுப் பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப் படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி.), துவக்கப் பள்ளிகளுக்கும் (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கப்படும். எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் (தாலுகா) உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (மால்ஸ்) 31.3.2020 வரை மூடப்படும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடரூ.60 கோடி உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும். கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.