tamilnadu

img

மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிராம ஜனநாயகத்தை முன்னிறுத்துவோம்... பெ.சண்முகம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் போராட்டத்தீ காட்டுத்தீயாய் பரவ இருக்கிறது. காரணம் மத்திய பாஜக அரசு ஜனவரி 16 அன்று இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிக்கை.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி சில திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் முன்அனுமதி பெற வேண்டியது அவசியம். இதில் தான் தற்போது மாற்றம் செய்து சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்றும், பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்களைநடத்த வேண்டியதில்லை என்றும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் எதேச்சதிகாரமானஇந்த நடவடிக்கை முழுக்க முழுக்க வேதாந்தா உள்ளிட்ட கம்பெனிகளின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பது வெட்டவெளிச்சமான ஒன்று. 

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தொடர்பான திட்டங்கள் ஏற்கனவே “ஏ” வகையில் இருந்தது. தற்போதைய உத்தரவின் மூலம் அதை “பி” வகைக்கு மாற்றியிருப்பதன் காரணமாக மேற்கண்ட பிரச்சனை என்பது மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எடுப்பது தொடர்பான பிரச்சனை எழுந்த போது வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனையை கேட்டறிந்தார். வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் 8.10.2015 அரசாணை எண்.186 மூலம் மீத்தேன் எடுக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

கொச்சியிலிருந்து கோவை மாவட்டம் முதல் கிருஷ்ணகிரி வழியாக மங்களூரு வரை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக குழாய்மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடிய போது விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தியதுடன் விளைநிலங்களின் வழியாக கெயில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தடைவிதித்தார். அது மட்டுமல்லாமல், “மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் அல்ல! மக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் எனது அரசு அனுமதி தராது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.அவருடைய வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் தொடர்பான பிரச்சனையில் இத்தகைய உறுதியான நிலைபாட்டை எடுப்பதற்கு பதிலாக மக்கள் நலனை காவு கொடுத்தாவது தனது நலனை, பாதுகாத்துக் கொள்வது என்ற முறையில் தான் செயல்படுகிறார் என்பது தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகிறது. 

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக 3.7.2019 அன்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள்,“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் எங்கும் அனுமதிக்க மாட்டோம். இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். அது மட்டுமல்லாமல்,இது தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அப்போது முதலமைச்சரும் அவையில் இருந்தார். சட்ட அமைச்சர் சட்டமன்றத்தில் அளித்த இந்த உறுதிமொழி, தங்களின் நிலம் பாழ்பட்டுவிடுமோ காவிரி டெல்டா பாலைவனமாகிவிடுமோ என்று அச்சத்தில் இருந்த விவசாயிகளிடம் நிம்மதியான நிலையை தோற்றுவித்தது. அதுமட்டுமல்லாமல், அதிமுக தனதுநாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில், “காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்” என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இதற்கு மாறாகமத்திய அரசின் ஜனவரி 16 தேதியிட்ட உத்தரவுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம் “வெண்டைக்காயை விளக்கெண்ணையில் போட்டது போல்” உள்ளது. 

நீரியல் விரிசல் முறையின் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுப்பது நிலம், நிலத்தடி நீர், சுற்றுசூழல் என பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். பலஆயிரம் அடி ஆழத்திலிருந்து நீரை வெளியேற்றி எரிவாயு எடுப்பதன் காரணமாக தமிழகமே பாலைவனமாகிவிடும் என்று பல்வேறு நிபுணர்களால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டுமென்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. இதற்கு மாறாக, விவசாயிகள் எதிர்பபு தெரிவிக்கிறார்கள்; இப்போது உகந்த சூழல் இல்லை என்றெல்லாம் தெரிவித்திருப்பது, தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதையே வெளிப்படுத்துகிறது. எனவே, இந்த ஆட்சியாளர்களை நம்பி நாம் வேடிக்கை பார்க்க முடியாது. 

நாளை கிராம சபைக் கூட்டத்தில்...
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு இணையான வலிமை கிராம சபைக்கு உண்டு. கிராம சபையில் மக்களுக்கே அதிகாரம். அதை முழுமையாக பயன்படுத்துவோம். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், ஊராட்சிமன்றங்களுக்கு 29 வகையான அதிகாரங்களை வழங்கியிருக்கிறது. குறிப்பாக, விவசாயம், நீராதாரம், சுற்றுசூழல் இவற்றை பாதுகாக்க வேண்டியது ஊராட்சிமன்றங்களின் கடமையாகும். எனவே, வரும் ஜனவரி 26ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் மக்கள் நலன், தமிழக நலன்களுக்கு எதிரான திட்டங்களை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சிமன்ற தலைவர்களை வாக்காளர்களாகிய நாம் வலியுறுத்த வேண்டும். இதற்கு, வாக்காளர்கள் அனைவரும் அவரவர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பது அவசியம். காவிரி டெல்டா மாவட்ட மக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அரசு தடைவிதிக்க வேண்டுமென்றும், எட்டுவழிச்சாலை திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழக்கும் அபாயம் உள்ளது. அதே போல் உயரழுத்த மின்கோபுரம் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால் நிலத்தின் மதிப்பு மிக மோசமாக குறைகிறது. பெட்ரோலிய குழாய், எரிவாயு குழாய் என மேற்படி திட்டங்களால் விளை நிலங்கள் முற்றிலும் அழிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் வேளாண்மை கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அதை நம்பி இருக்கக் கூடிய பல லட்சக்கணக்கான மக்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு கிராமங்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும். 

எனவே, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று தமிழக மக்களின் நலன்களை காக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம். மத்திய - மாநில ஆட்சியாளர்களுக்கு, மக்கள் தான் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை உணர்த்துவோம். பன்னாட்டு கம்பெனிகளுக்குபாடம் புகட்டுவோம். அதே நேரத்தில் அதிகாரம் எனும் ஆயுதம் கொண்டு காவல்துறையை ஏவி நமது மண்ணையும், மக்களையும் அழிக்க ஆட்சியாளர்கள் முயற்சித்தால் அதை முறியடிக்க ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்.