tamilnadu

சென்னையில் வீட்டு வேலை செய்த சிறுமி காயங்களுடன் சடலமாக மீட்பு; 6 பேர் கைது

சென்னை,நவ.03- சென்னையில் வீட்டு வேலை செய்துவந்த சிறுமி குளியலறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அமைந்தகரை, மேத்தா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நிஷாத்,இவர்  பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் கும்பகோணம், திருவிடைமருதூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி இந்த சிறுமி, வீட்டின் குளியலறையில் இறந்து கிடப்பதாக அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் சர்புதீன் என்பவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை காவல்துறையினர்  சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.

அப்போது சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பது தெரியவந்தது,இதைத் தொடர்ந்து, இதனை சந்தேக மரணம் என்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே நடத்தப்பட்ட விசாரணையில், முகமது நிஷாத்தின் 4 வயது மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்ததாகவும், இதனால் அந்த சிறுமியின் கவனக்குறைவுதான் இதற்கு காரணம் என்று அவரை அடித்ததாகவும், அதன்பிறகே குளிக்கச் சென்ற சிறுமி அங்கே இறந்து கிடந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து உடற்கூராய்வு முடிவுகளிலும் சிறுமியின் உடலில் கடும் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.பின்னர் குடும்பத்தினரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது கடந்த சில மாத காலமாகவே அவர்கள், அந்த சிறுமியை தொடர்ந்து தாக்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் தீபாவளியன்று தாக்கியுள்ளனர். அதில் அந்த சிறுமி இறந்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், முகமது நிஷாத், அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்கள் லோகேஷ், லோகேஷின் மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண் மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகிய 6 பேரையும்  கைது செய்தனர்.

6 போரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.