சென்னை,பிப்.19- ஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் குடும்பத்தோடு தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் பாஜக கட்சியில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி பிரியா என்பவரும் பாஜக செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக உள்ளார். ஜெயராமன் அதே பகுதியில் ‘யெங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா’ என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார்.
அதில், தான் ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டியில் உறுப்பினர் என்றும், இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் தான் ஒரு ரெப்ரி என்பது போன்றும் போலியான விசிட்டிங் கார்டு தயார் செய்து வைத்திருந்தார். தேசிய புலனாய்வுப் பிரிவு, வருமான வரித்துறை, ரயில்வே, உளவுத்துறை போன்ற பல்வேறு பணிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கித் தர முடியும் என்று பலரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் வேலூரைச் சேர்ந்த லோகேஷ் குமார் (32) என்பவரிடம் வேலை வாங்த் தருவதாக்கூறி ரூ.17 லட்சம் பெற்றுள்ளனர் ஆனால் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றிவந்தனர் இந்நிலையில் லோகேஷ் குமார் பணத்தைத் திருப்பி கேட்ட போது போலியான பணி ஆணையை வழங்கியுள்ளனர்.
உண்மையையறிந்த லோகேஷ் குமார் தாம்பரம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகிகள் ஜெயராம், அவரது மனைவி பிரியா உட்பட 4 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.