சென்னை, மே 11-தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவில்லை என்று தமிழகதலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஆசிரியர் சங்கம் புகார் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்பணியில் சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சிலரது வீட்டு முகவரிக்கு தபால் ஓட்டு அனுப்பப்பட்டது. அதில்பலரது முகவரி தவறு என்று திருப்பிஅனுப்பப்பட்டுவிட்டன. தபால் ஓட்டுகிடைக்காதவர்கள், அங்குள்ளவட்டாட்சியரிடம் முறையிடுகின்றனர். ஆனால் எந்த பலனும் இல்லை. தற்போது தபால் ஓட்டுகளை தபாலில்தான் செலுத்த வேண்டும் என்று புதிய நிபந்தனையை தேர்தல் ஆணையம் கூறுகிறது. மேலும் ஓட்டு எண்ணும் மே 23ஆம் தேதியன்றும் தபால் ஓட்டு போடுவதற்கு வசதிகள் செய்து தரப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.