சென்னை:
நடைபெறும் சட்டமன்றத் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற அணியில் இதுவரை 5 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப் பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீம் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. காங்கிரஸ் தலைவர்களும் இதுதொடர்பாக சென்னை சத்திய மூர்த்திபவனில் கூடி ஆலோசித்தனர்.இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலினின் அழைப்பு ஏற்று சனிக்கிழமை இரவு 11 மணிக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது.
ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை (மார்ச்7) காலையில்தான் அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர்.அந்த ஒப்பந்தப்படி, காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 25 தொகுதி கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுகவுடான தொகுதி பங்கீடு உடன்பாடு முழு திருப்தி அளிக்கிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.