சென்னை:
தமிழகம் முழுவதும் 2,391 அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் இல்லாதது தெரியவந்துள்ளது.பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மற்றும் மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதியும் முதற்கட்டமாக கழிவறைகள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில் கழிவறை, குடிநீர் மற்றும் சுற்றுச்சுவர் வசதிகள் இல்லாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர் இல்லாதது தெரியவந்துள்ளது.இந்த பட்டியலில் உள்ள பள்ளிகளை சுற்றியுள்ள கிராமங்களின் எண்ணிக்கை, அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, கழிவறைகள் ஏற்படுத்த போதுமான வசதி இருக்கிறதா? என்பதை தெளிவாக குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.