tamilnadu

img

நீட் விலக்கு முடக்கலும் நீட்டி முழக்கும் ராஜ்நாத்தும்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியை ஆதரித்து நீட்டி முழங்கியுள்ளார். அப்போது அவர் நாட்டு மக்களுக்கு பல அரும் பெரும் தகவல்களை அள்ளி வீசியுள்ளார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற ஐந்தாண்டுகளில் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். உண்மைதான். இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் மோடி அளவுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம்சென்றதில்லை. அதைத்தான் குறிப்பிடுகிறார் ராஜ்நாத் சிங். அத்துடன் அவர் வெளிநாடுகள் செல்ல செலவழித்த தொகைதான் மிக மிக அதிகம். அது ஒருவளர்ச்சித் திட்டத்துக்கு செலவழிக்கும் தொகையை விட கூடுதலாக இருக்கும் என்பதையும்சேர்த்து அவர் சொல்லியிருக்கலாம். மேலும் அவர் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியும் தில்லியில் பாஜக தலைமையிலான ஆட்சியும் அமையும் பட்சத்தில் மிகப் பெரிய வளர்ச்சிப் பாதையை நோக்கி நாடுசெல்லும் என்றும் கூறியுள்ளார். அவர் கூறிய வளர்ச்சி யாருக்கானது? என்பதையும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம்.


மோடியின் ஆட்சியில் வளர்ந்திருப்பவர்கள் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கனவான்கள்தான். அதுபோல எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு வேண்டியவர்களும் சம்பந்திகளும் தான். அதற்குமறுப்பு சொல்ல ராஜ்நாத் சிங்கால் இயலாது.ஏனெனில் அவர்களது வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது இவர்கள்தான். முதலமைச்சர் எடப்பாடி, மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான ஆட்சியமைந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும் என்றுகூறுவது இதை மனதில் வைத்துத்தானோ என்னவோ? ஏனென்றால் இவர்களது உறவு அப்படி. தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை தொலைத்த நீட் தேர்வை கைவிட வேண்டுமென சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிஒப்புதல் பெற வேண்டியது ராஜ்நாத் சிங்கின் மத்திய உள்துறை அமைச்சகமே. 


ஆனால் அதை அனுப்பாமல் கிடப்பில்போட்டது இதே ராஜ்நாத் சிங் தான். அந்த துரோகம் வெளிப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வந்தபதில் கடிதத்தினால்தான். இதுதான் அவர்கள்மாநில வளர்ச்சிக்காகவும் நாட்டு வளர்ச்சிக்காகவும் செய்கிற சேவையாக இருந்தது. இப்போது தமிழகத்தின் விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகை பெற்றுத் தரப்படும்.கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றெல்லாம் கீழிறங்கி பேசியுள்ளார். ஆனால் விவசாயிகளுக்கு ஆதார விலையை மாநில அரசுகள் அதிகரித்துத் தரக்கூடாது என்றுஉத்தரவிட்டது மோடியின் ஆட்சிதான்.அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்திற்கு அனுமதி கொடுத்தது இவர்கள்தானே.இவர்களால் நாட்டுக்கு எப்படி வளர்ச்சி ஏற்படும்.