tamilnadu

img

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான பதிவு

பாஜக கும்பலுக்கு ஆதரவாக அதிமுக அரசு

சென்னை,ஜூலை 31- பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் இழிவாக பதிவிடும் பாஜக கூட்டத்துக்கு தொடர்ந்து சாமரம் வீசும் அதிமுக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  பொது வெளியில்  செயல்படும் பெண் செயல்பாட்டாளர்களை இழிவாகவும் அருவருக்கத்தக்க விதத்திலும் சமூக வலைதளங்களில் பதிவிடும் கூட்டம்  நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.  குறிப்பாக பத்திரிகைத்துறையில் திறம்பட செயல்படும் சில பெண்களை அச்சுறுத்தும் விதத்திலும், அருவருக்கத்தக்க வகையிலும்  சமூக வலைத்தளங்களில் கிஷோர் கே ஸ்வாமி என்ற நபர் தொடர்ந்து பதிவிட்டு வருவது பெண்கள் மத்தியில்  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  அந்நபர் மீது  இதுவரை ஐந்து பெண் பத்திரிகையாளர்கள் சென்னை சைபர் கிரைம் குற்றத்தடுப்புப்பிரிவில் புகார் மனு அளித்துள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள்  இது வரை கொடுத்த புகார்களின் பேரில் 3 எப்ஐஆர்கள் அந்நபர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டு ஒரு பெண் பத்திரிக்கையாளர் கொடுத்த புகாரில் கிஷோர் கே சாமியை கைது செய்து ஒரு மணி நேரத்தில் நிபந்தனை ஜாமீனில் காவல்துறை வெளியே அனுப்பியது. இச்சூழலில்  2020 ஜூலை 29 ஆம் தேதி ஒரு பெண் பத்திரிகையாளர் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 109, 357(d), மற்றும் 4 of tamilnadu prohibition of  harassment of women ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை சைபர் கிரைம் காவல் துறை கைது  செய்தது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஹெச். ராஜா, கிஷோர் கே சாமியை விடுவிக்கக்  கோரி தமிழகத்தில் அமைச்சர்கள் பலரை நிர்ப்பந்தித்துள்ளார். அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தின் பேரில் கைதாகி 3 மணி நேரத்தில் கிஷோர் கே சாமியை காவல்துறை  விடுதலை செய்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறைகள் அசுர வேகத்தில் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றன. பெண்களும் , குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட போதும், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட போதும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போதும் வாய் திறக்காமல் மௌனம் காத்த தமிழக அமைச்சர்கள், பெண்களை இழிவாக பதிவிடும் குற்றவாளியை விடுவிக்க இத்தனை முயற்சிகள் எடுத்ததன் நோக்கம் என்ன? பெண்களின் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழக அமைச்சர்கள் பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளியை பாதுகாக்க முயற்சித்த கொடும் செயலை ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. சைபர் கிரைம் குற்றத்தடுப்புப் பிரிவு  பிணையில் வெளிவர முடியாத குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் அக்குற்றவாளியை விடுவித்ததன் உள் நோக்கம் என்ன?

பல ஆண்டு காலமாக பெண்கள் மீது இத்தகைய வன்முறைகளை பிரயோகிக்கும் நபருக்கு தமிழக அரசும், காவல்துறையும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமென்ன? காவல் துறையின் இத்தகைய செயல்களால் தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்குமே ஒழிய குறையாது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் சிலர் அனுதினமும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும், பதிவிடுவதும் காவல் துறையின் இத்தகைய செயல்பாட்டால்தான் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜகவின் நலன் காக்க தமிழக பெண்கள் நலனை பலிகொடுக்க ஜனநாயக மாதர் சங்கம் ஒரு போதும் அனுமதிக்காது. எனவே தமிழக காவல்துறை கிஷோர் கே சாமியை உடனடியாக கைது செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பிரச்சனை தொடர்பாக இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு பெண்கள் இயக்கம், பெண்கள் இணைப்புக்குழு உள்ளிட்ட பல்வேறு மகளிர் இயக்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இளைப்பவர்களை அதிமுக அரசும் பாஜகவும் பாதுகாப்பது ஏன் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில செயலாளர் ஜி.மஞ்சுளா விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.