world

img

ரஷியாவில் 50 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் 50 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானதாக தகவல்கள் வெளியான நிலையில், அது சீன எல்லை அருகே விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சரிவான பகுதியில், விமானம் விழுந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் விமானம் சிதறுண்டு கிடப்பதாகவும் ரஷ்ய பேரிடர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உள்பட 50 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக பயணிகள் விமானம், ஆமூர் பகுதியில் சென்றபோது, ரஷ்ய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சைபீரியாவைச் சேர்ந்த அங்காரா நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், டின்டா விமான நிலையத்தை நெருங்கும் போது ரேடாரில்  இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.