tamilnadu

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு  ஓட்டல் நிர்வாக படிப்பு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு  ஓட்டல் நிர்வாக படிப்பு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

சென்னை, பிப். 22- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் இளங்கலை அறிவியல் (B.Sc) பட்டப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாட்கோ சார்பாக பிளஸ் 2 வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை (NTA) சார்பில் நடத்தப்படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத் தேர்வு மூலமாக, மூன்று வருட முழுநேரப் பட்டப்படிப்பில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. சென்னை தரமணியிலுள்ள 'இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி' என்ற நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இதில் பயில விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 2026 மார்ச் 25. இத்தேர்வானது 2026 ஏப்ரல் 25 அன்று இணையதளம் வழியாக நடைபெறும். இப்படிப்பினை தாட்கோ மூலமாகப் பயில விரும்பும் மாணவர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், மாணவர்களின் திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத் துறை, கப்பல் துறை மற்றும் சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.