சென்னை:
பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக, இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை பகுதியை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பத்திரிகையாளர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வலதுசாரிகள் தொடர்ந்து ஆபாச, அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர், பத்திரிகையாளர் அமைப்புகள், மாதர் சங்கம் என சென்னையில் மட்டும் 15க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.அரசியல் இயக்கங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், ஆளுமைகளும் இத்தகைய ஆபாச அருவருக்கத்தக்க தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சில புகார்களில் காவல் துறை நடவடிக்கை எடுத்தாலும் அது குற்றத்தின் தீவிரத்திற்கு தகுந்ததாக அமையவில்லை. அதேவேளையில் வலதுசாரி சக்திகள் கொடுக்கும் புகார்கள் மீது காவல்துறை வேகமாக செயல்பட்டு வலைதளத்தையே முடக்குகிறது.
எனவே, புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். புகார்களைப் பெறுவதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக்கூடாது, இணையதளத் தில் பெண்கள் மீது வன்முறையை நிகழ்துபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் மீதான டிஜிட்டல் பாலியல் அச்சுறுத்தலை தடுக்க கடுமையான தண்டனைச் சட்டங்களை அரசு இயற்ற வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.18) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி 142, 143 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கே.கனகராஜ் பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், “இணையதள ஆபாச தாக்குதல் மீது நடவடிக்கை கோரி பெண் பத்திரிகையாளர் உட்பட 14 புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புகாரின் மீது கைது செய்யப்பட்ட நபரை விடுக்க உதவிய நபர்களுக்கு நன்றி என்று பாஜக தலைவர் எச்.ராஜா கூறுகிறார். காவல்துறை நேர்மையாக செயல் படாவிடில் மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை வரும்” என்று கேள்வி எழுப்பினார்.
குற்றவாளிகளை பாதுகாக்கும் காவல்துறை
“சங்பரிவார் அமைப்புகள் புகார் கொடுத்தால் உடனே கைது செய்வது, வலைதளத்தை முடக்குவது, கணவன் வரும் வரை பெண்களை அழைத்து சென்று காவல் நிலையத்தில் சிறை வைப்பது என காவல் துறை செயல்படுகிறது. பெண்களை பாதுகாக்க பல்வேறு சட்டம் இருந்தாலும், காவல்துறையும், நிர்வாகமும் அதனை புறக்கணிக்கிறது. காவல் துறை குற்றவாளிகளைத்தான் பாதுகாக்கிறது; துணைபோகிறது” என்றும் அவர் கூறினார்.
அதிகாரமற்ற காவல்துறை
“காவல்துறை ஒரு கட்சியின் வேலைக்காரர்கள் அல்ல. சங்பரிவார் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடந்தாலும் அதை கண்டிப்போம். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு வாழ்த்துப்பா பாட முடியாது. அனைத்து கட்சி சார்பில் டிஜிபியை சந்தித்து முறையிட்டபோது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அதன் படி நடக்கவில்லை. காவல்துறை ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிடில், அதிகாரமற்ற காவல் துறை அடியாள் வேலைக்குத்தான் சரியானது என்று மக்கள் கருதுவார்கள். இந்த போக்கு தொடர்ந்தால் போராட்டம் தொடரும்” என்றும் அவர் கூறினார்.இந்தப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், வி.தனலட்சுமி, இ.சர்வேசன், கே.முருகன், எம்.தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் எதிரொலி
இந்தப்போராட்டத்தை தொடர்ந்து பத்திரிகையாளர் கவின் மலர் அளித்த ஒரு புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது.