பொள்ளாச்சியை அடுத்த சின்னார்பதியில், வேன் விபத்தில் உயிரிழந்த மூன்று கூலித் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு உரிய நிதி உதவி வழங்கிட வேண்டுமெனவும், காயமடைந்த அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சையும் நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
"பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியிலிருந்து வேலைகளுக்காக வேனில் சென்ற போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
நவமலை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு போதிய வேலையும், வருமானமும் இல்லாததால் அருகில் உள்ள கிராமங்களுக்கு கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, உயிரிழந்த மூன்று கூலித் தொழிலாளிகளான மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு உரிய நிதி உதவி வழங்கிட வேண்டுமெனவும், காயமடைந்த அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சையும் நிவாரணமும் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.